ANI
இந்தியா

தேர்தல் எதிரொலி: ஓய்வூதியத்தை மும்மடங்கு உயர்த்திய நிதீஷ் குமார்!

ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் படிகள் உயர்த்தப்பட்டுள்ளன.

ராம் அப்பண்ணசாமி

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைம்பெண்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ. 400-ல் இருந்து ஏறத்தாழ மூன்று மடங்கு, அதாவது ரூ. 1,100 ஆக உயர்த்தி பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று (ஜூன் 21) அறிவித்துள்ளார்.

ஜூலை முதல் உயர்த்தி வழங்கப்படவுள்ள இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 1.09 கோடி பயனாளிகள் பலன் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஹார் முதல்வரின் எக்ஸ் கணக்கில் இன்று வெளியிடப்பட்ட பதிவில் கூறியதாவது,

`சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அனைத்து முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைம்பெண்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 400-க்கு பதிலாக ரூ. 1100 ஓய்வூதியத்தைப் பெறுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜூலை மாதம் முதல் அனைத்து பயனாளிகளுக்கும் அதிகரிக்கப்பட்ட தொகையில் ஓய்வூதியம் கிடைக்கும். இந்த தொகை மாதத்தின் 10-ம் தேதி அனைத்து பயனாளிகளின் கணக்கிற்கும் அனுப்பப்படுவது உறுதி செய்யப்படும். 1 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 255 பயனாளிகளுக்கு இது பெரிதும் உதவும்.

சமூகத்தின் விலைமதிப்பற்ற அங்கமான முதியோரின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதே எங்கள் முதன்மையான முன்னுரிமை. இந்த திசையில் மாநில அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும்’ என்றார்.

நடப்பாண்டின் இறுதியில் நடைபெறவுள்ள பீஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக வெளியாகியுள்ளதால் இந்த அறிவிப்பு பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு எதிராக தங்கள் நிலையை வலுப்படுத்த, ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சித் தலைவர்களின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ரூ. 10 லட்சம் வரையிலான மதிப்புடைய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வரம்பு ரூ. 5 லட்சமாக இருந்தது.

மேலும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் படிகள் நேற்றைக்கு முந்தைய தினம் (ஜூன் 19) உயர்த்தப்பட்டுள்ளன. மாவட்ட ஊராட்சி அமைப்பின் தலைவருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ. 20 ஆயிரம் மாதப் படி, ரூ. 30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராம ஊராட்சித் தலைவர்களின் மாதப் படி, ரூ. 5,000 இருந்து ரூ. 7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.