பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் (கோப்புப்படம்) 
இந்தியா

எம்எல்ஏ கிடையாது, ஆனால் 20 ஆண்டுகள் பிஹார் முதல்வர்: இது நிதிஷ் குமாரின் உத்தி! | Nitish Kumar | Bihar Elections |

1989 முதல் 2004 வரை மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் நிதிஷ் குமார்.

கிழக்கு நியூஸ்

பிஹாரிலுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய நாள்களில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் களமிறங்கும் ஐக்கிய ஜனதா தளம் மொத்தம் 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் போட்டியிடவில்லை.

ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமார் போட்டியிடாமல் இருப்பது இது முதன்முறையல்ல. கடந்த 20 ஆண்டுகளாக அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் இருக்கிறார். இருந்தபோதிலும், அவர் பிஹார் முதல்வராகப் பதவி வகித்துள்ளார். தற்போதுகூட அவர் பிஹார் சட்டப்பேரவை உறுப்பினர் கிடையாது. இருந்தாலும், அவர் தான் பிஹார் முதல்வர்.

நிதிஷ் குமார் வரலாற்றிலேயே அவர் இருமுறை மட்டும்தான் சட்டப்பேரவைக்குத் தேர்வாகியிருக்கிறார். அதுவும் கடைசியாக அவர் சட்டப்பேரவைக்குத் தேர்வானது 30 ஆண்டுகளுக்கு முன்பு.

நிதிஷ் குமார் 1985 சட்டப்பேரவைத் தேர்தலில் ஹர்னாட் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்வானார். பிறகு, 1995 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியிலிருந்து தேர்வானார். ஆனால், 1996-ல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்.

அவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காலத்தில்கூட அவர் பிஹார் முதல்வராக இருந்ததில்லை. 2000-வது ஆண்டில் தான் அவர் முதல்முறையாக பிஹார் முதல்வராகிறார். அப்போது அவர் சட்டப்பேரவை உறுப்பினர் கிடையாது. பிறகு, 8 நாள்களிலேயே ஆட்சி கவிழ்ந்தது.

2005-ல் மீண்டும் பிஹார் முதல்வரானார் நிதிஷ் குமார். 2014 வரை முதல்வராக இருந்தார். பிறகு, 2015-ல் பிஹார் முதல்வரானார். அப்போதிலிருந்து இன்று வரை நிதிஷ் குமார் தான் பிஹார் முதல்வர். இந்தக் காலகட்டத்தில் ஒருமுறைகூட சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிட்டதில்லை.

சட்டப்பேரவை உறுப்பினராக அல்லாமல் முதல்வராகத் தேர்வாவது எப்படி?

ஒரு மாநிலத்தின் முதல்வர் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது சட்டமேலவை உறுப்பினராக இருக்க வேண்டும். இந்தியாவில் உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகம் மற்றும் பிஹார் ஆகிய 6 மாநிலங்களில் சட்டமேலவை உள்ளது.

2005-ல் பிஹார் முதல்வர் ஆன பிறகு, சட்டமேலவைத் தேர்தல்களில் மட்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார் நிதிஷ் குமார். 2012, 2018 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் சட்டமேலவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார் நிதிஷ் குமார்.

இதன் காரணமாகவே, களத்துக்குச் சென்று தேர்தலை எதிர்கொள்ள நிதிஷ் குமாருக்கு அச்சம் என எதிர்க்கட்சிகள் அவரை விமர்சிப்பதுண்டு. ஆனால், தான் விருப்பப்பட்டு தான் சட்டமேலவை உறுப்பினர் ஆவதாக நிதிஷ் குமார் முன்பொருமுறை விளக்கமளித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தலை காட்டாமல் இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றித் தலைவராகவே நிதிஷ் குமார் இருந்துள்ளார். 1989-ல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன்பிறகு, 1991, 1996, 1998, 1999 மற்றும் 2004 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நிதிஷ் குமார்.

Despite not contesting in any Assembly election after 1995, Bihar Chief Minister Nitish Kumar has continued to hold the top post for almost two decades.

Bihar Election | Nitish Kumar |