பாஜகவின் தேசிய செயல் தலைவராக பிஹாரைச் சேர்ந்த நிதின் நபின் (45) நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கூடியபோது இம்முடிவு எடுக்கப்பட்டது.
பாஜகவின் தேசியத் தலைவராக உள்ள ஜெ.பி. நட்டாவின் பதவிக் காலம் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டது. இருந்தபோதிலும், நீட்டிப்பு காரணமாகவே ஜெ.பி. நட்டா தலைவராகத் தொடர்ந்து வருகிறார்.
பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித் ஷா 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவருடைய தலைமையின் கீழ் சில மாதங்களுக்கு செயல் தலைவராகச் செயல்பட்டார் ஜெ.பி. நட்டா.
தற்போது தேசியத் தலைவராக உள்ள ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சராகவும் உள்ளார். இவருடைய பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இவருக்கு அடுத்து யார் என்ற கேள்வி நீண்ட காலமாக இருந்து வந்தது. இவற்றுக்குப் பதிலளிக்கும் விதமாகவே நிதின் நபின் கட்சியின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பாஜகவின் இளம் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், ஒரு பெரும் தலைமுறை மாற்றத்தை நோக்கி பாஜக நகர்வதை இது சுட்டிக்காட்டுகிறது.
நிதின் நபின் பிஹாரில் அமைச்சராக இருக்கிறார். 5 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி கண்டிருக்கிறார். வரும் ஜனவரியில் இவர் முறைப்படி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த நிதின் நபின்?
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 1980-ல் பிறந்தவர் நிதின் நபின். அப்போது அது பிஹார் மாநிலம். பாஜக மூத்த தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான நவீன் கிஷோர் பிரசாத் மகன் தான் நிதின் நபின்.
இளம் வயது முதலே ஆர்எஸ்எஸ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அந்த அமைப்பின் மாணவர் பிரிவிலும் சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். 2006-ல் தந்தை நவீன் கிஷோர் பிரசாத் மறைவுக்குப் பிறகு 26 வயதில் பாட்னா மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது முதல் எல்லா சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றி கண்டு வருகிறார் நிதின் நபின்.
Nitin Nabin | BJP | National Working President | JP Nadda | Amit Shah |