படம்: https://x.com/SriNithyananda
இந்தியா

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நித்யானந்தா

உயிர்த் தியாகம் செய்யப்பட்டதாக வதந்திகள் பரவின.

கிழக்கு நியூஸ்

நித்யானந்தா நேரலையில் வரவிருப்பதாக கைலாசா பக்கத்திலிருந்து ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நித்யானந்தா (இயற்பெயர் ராஜசேகர்). இவர் கர்நாடகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆசிரமங்களை நடத்தி வந்தார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. 2010-ல் ஒருமுறை கைது செய்யப்பட்டு, பின்னாளில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

2019-ல் இந்தியாவைவிட்டு வெளியேறிய நித்யானந்தா, கைலாசா என்று ஒரு நாட்டை உருவாக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நித்யானந்தா எப்படி நாட்டைவிட்டு தப்பிக்க அனுமதிக்கப்பட்டார் என கர்நாடக அரசை நோக்கி கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. கைலாசாவிலிருந்தபடி காணொளிகளை வெளியிடுவதாக நித்யானந்தாவின் காணொளிகள் இணையத்தில் வெளியாகி வந்தன.

இதனிடையே, தமிழ்நாட்டில் உள்ள மூன்று கோயில்களின் மடாதிபதியாக தன்னை நியமிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். கடந்த ஜனவரியில் இந்தியாவில் இல்லாத ஒருவரால் எப்படி கோயில்களை நிர்வகிக்க முடியும் என்று கூறி நித்யானந்தா தரப்பு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

அண்மைக் காலமாக நித்யானந்தா தொடர்புடையக் காணொளிகள் எதுவும் இணையத்தில் பெரிதளவில் வராமல் இருந்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்பட்டன. உயிர்த் தியாகம் செய்யப்பட்டதாக வதந்திகள் பரவின. முன்பொரு முறை நித்யானந்தாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. எனவே, இந்தத் தகவல்கள் மீண்டும் அதிகளவில் பரவி வந்தன.

இவை அனைத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கைலாசாவின் அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்திலிருந்து "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்ற வாசகத்தோடு கேஜிஎஃப் பின்னணி இசையுடன் நித்யானந்தாவின் காணொளி வெளியாகியிருக்கிறது. மேலும், இந்திய நேரப்படி ஏப்ரல் 3 அதிகாலை 4.30 மணியளவில் நித்யானந்தா நேரலையில் வரவிருப்பதாகவும் ஓர் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.