ANI
இந்தியா

மாநிலங்களவை விவாதம்: திமுக எம்.பி. குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

காங்கிரஸுடன் அவர்கள் கூட்டணியில் இருந்தபோது, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது. பிரதமர் மோடிதான் தடையை நீக்கினார்.

ராம் அப்பண்ணசாமி

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடவில்லை என்றும், போதிய நிதி ஒதுக்கவில்லை என்றும் திமுக எம்.பி. திருச்சி சிவா முன்வைத்த குற்றச்சாட்டிற்குப் பதிலளித்து தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய திட்டங்களைப் பட்டியலிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின் பதிலுரையை நேற்று (பிப்.13) மாநிலங்களவையில் வழங்கினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பதிலுரைக்கு நடுவே, தமிழகத்தின் கோரிக்கைகளான கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என்றும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார் திமுக எம்.பி. திருச்சி சிவா.

இதற்கு பதிலளிக்கும் வகையில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது,

`சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான நிதியில் 65 சதவீதத்தை மத்திய அரசு தருகிறது. ரூ. 30 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீட்டில் தமிழக டிஃபென்ஸ் காரிடார் 2019-ல் திறக்கப்பட்டது. தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட பிறகே, உத்தர பிரதேசத்திற்கு டிஃபென்ஸ் காரிடார் அறிவிக்கப்பட்டது.

பிரதம மந்திரி முத்ரா டெக்ஸ்டைல் பார்க் திட்டம் விருதுநகரில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2019 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. எப்போதும் மத்திய அரசை குறை கூறுவதையே வேலையாகக் கொண்டிருக்கக்கூடாது. இப்போது குறை கூறும் உணர்வு காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தபோது எங்கே போனது?

காங்கிரஸுடன் அவர்கள் கூட்டணியில் இருந்தபோது, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது. பிரதமர் மோடிதான் தடையை நீக்கினார். அப்போது எங்கு சென்றீர்கள்? அப்போது காங்கிரஸ் கட்சியிடம் இது குறித்து நீங்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை? பிரதமர் மோடியை தமிழகத்தின் விரோதி என்று கூறுவது தவறு.

நான் கூறுவதை அமைதியாகக் கேட்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? உங்களுக்கு வாய்ப்பு வழங்கும்போது நீங்கள் பேசுங்கள். இன்று காலையில் இருந்து இரண்டு முறை பார்த்துவிட்டேன் நீங்கள் (திருச்சி சிவா) நியாயமாக பேசவில்லை. கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், மூத்த உறுப்பினர் சிவா மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.

சென்னை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசின் உதவியில்லாமல் செயல்படுத்த மாநில அரசுதான் முடிவு செய்தது. அது எந்த அரசு என்பது குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை. சர்வதேச வங்கிகளிடம் நிதியுதவி பெற்று சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு உதவுவதாக ஆரம்பத்தில் நாங்கள் தெரிவித்தோம்.

ஆனால் மாநில அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. மாநில அரசின் முடிவுக்கு மதிப்பளித்து அதை நாங்கள் விட்டுவிட்டோம். உங்களுக்கு எப்போது வேண்டுமென்றாலும் சர்வதேச வங்கிகளிடம் இருந்து நிதியுதவி பெற்றுத் தருகிறோம் என்று கூறினேன்.

மெட்ரோ திட்டத்திற்கு நிதியுதவி வழங்கவேண்டும் என்று கடந்த வருடம் பிரதமரை சந்தித்து தமிழக முதல்வர் கோரிக்கை வைத்தார். அதற்கு பிரதமரும் ஒப்புதல் அளித்தார். ஜல்லிக்கட்டிற்கும், மெட்ரோ திட்டத்திற்கும் எங்கள் அரசுதான் உதவியுள்ளது.

2014-ல் இருந்து இன்று வரை தமிழகத்தில் சுமார் 4,100 கி.மீ. தூரத்திற்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாரத்மாலா திட்டத்தின் கீழ் 5 பசுமை வழி காரிடார்கள் தமிழகத்தில் கட்டப்படுகின்றன. உடான் திட்டத்தின் கீழ் சேலம் விமான நிலையம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.

ரூ. 1260 கோடி மதிப்பீட்டில் சென்னை விமானநிலையம் மேம்படுத்தப்பட்டது. பி.எம். ஆவாஸ் திட்டத்தின் கீழ் 12 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டன. 89 லட்சத்திற்கும் அதிகமான குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டன’ என்றார்.