ANI
இந்தியா

மணிப்பூர் வன்முறைகள்: விசாரணையை தொடங்கிய தேசிய புலனாய்வு முகமை!

மீண்டும் அதிகரித்துள்ள வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, தலைநகர் இம்பாலில் அனைத்து கட்சி அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார் முதல்வர் பிரேன் சிங்.

ராம் அப்பண்ணசாமி

மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய குக்கி கிளர்ச்சியாளர்கள் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 6 நபர்களைக் கொலை செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பான விசாரணையில் இறங்கியுள்ளது தேசிய புலனாய்வு முகமை.

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் சமீபத்தில் பழங்குடியின பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, அதன்பிறகு எரித்துக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் ஜிர்பாம் மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் காவல்படையின் முகாம் மீது தாக்குதல் நடத்தினர் குக்கி கிளர்ச்சியாளர்கள். மத்திய ரிசர்வ் காவல்படை நடத்திய எதிர்தாக்குதலில் 10 கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மெய்தி இனத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 6 பேரைக் கடத்திச் சென்று கொலை செய்தனர் குக்கி கிளர்ச்சியாளர்கள். இந்த விவகாரம் குறித்த தகவல் பரவி, இம்பால் பள்ளத்தாக்கைச் சேர்ந்த ஜிரிபாம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் இல்லங்களை வன்முறையாளர்கள் குறிவைத்துத் தாக்கினர்.

இதனை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, காவல்துறையினர், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மணிப்பூர் வன்முறைக் காரணமாக இருந்த 6 நபர்களின் கொலை வழக்கு, குக்கி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் வழக்கு ஆகியவை குறித்த விசாரணையை மணிப்பூர் காவல்துறையிடம் இருந்து ஏற்றுள்ளது தேசிய புலனாய்வு முகமை.

இந்த வன்முறைகளுக்கு முதல்வர் பிரேன் சிங்கின் நிர்வாகத் தோல்வியே காரணம் எனவும், இத்தனை பிரச்னைகளுக்குப் பிறகும் இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கும் பிரதமர் மோடி, சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கெய்ஷம் மேகசந்திரா.

மணிப்பூரில் மீண்டும் வன்முறைகள் அதிகரித்து வருவது தொடர்பாக, தலைநகர் இம்பாலில் இன்று (நவ.18) மாலை 6 மணிக்கு அனைத்து கட்சி அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங். மேலும், மணிப்பூர் நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தில்லியில் ஆலோசனை நடத்துகிறார்.