மேகாலயாவில் தேனிலவிற்கு சென்ற ம.பி. தொழிலதிபர் தன் மனைவியால் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அம்மாநில சுற்றுலாத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ம.பி. மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷிக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில், தனது மனைவி சோனத்துடன் அவர் தேனிலவுக்காக மேகாலயாவிற்கு சென்றனர். தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ரகுவன்ஷியை சோனம் கொன்ற விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை செய்யப்பட்ட ராஜா ரகுவன்ஷி மேகாலயாவில் இரு சக்கர வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியுள்ளார். அவர் காணாமல்போன பிறகு காவல்துறையினரால் அந்த இரு சக்கர வாகனம் மீட்கப்பட்டது. அது முறைப்படி பதிவு செய்யப்படாத வாகனம் என்பது விசாரணையின்போது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சுற்றுலா பயணிகளுக்கு தனியார் வாகனங்களை வாடகைக்குவிட அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்த தடைவிதித்து போக்குவரத்துத் துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த தடையை மீறினால் அபராதம், வாகனம் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநில அரசு எச்சரித்துள்ளது.
மேலும் பிற மாநிலங்களில் இருந்து மேகாலயாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தொடர்பான விவரங்களை மாநில சுற்றுலா துறையின் செயலியில் லாட்ஜுகள், ஹோட்டல்கள், ரிசார்டுகள் போன்றவை கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள் அருகில் உள்ள காவல்நிலையங்களுக்கு பகிரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.