தில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான `இந்திரா பவனைத்’ திறந்து வைத்தார் அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தலைநகர் தில்லியில் 7, ஜந்தர் மந்தர் சாலையில் இருந்து செயல்பட்டது காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகம். பிரதமர் நேருவின் மறைவிற்குப் பிறகு அவரது அரசியல் வாரிசாக இந்திரா காந்தி அடையாளம் காணப்பட்டார். 1969-ல் இந்திரா காந்தி மற்றும் மொரார்ஜி தேசாய் ஆகியோரது தலைமையில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது.
மொரார்ஜி தேசாய் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஜனதா கட்சியுடன் இணைக்கப்பட்டது. இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி 24, அக்பர் சாலையில் இருந்து செயல்படத் தொடங்கியது. அதன்பிறகு கடந்த 56 வருடங்களாக 24, அக்பர் சாலை கட்டடத்தில் இருந்து செயல்பட்டது காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம்.
இந்நிலையில், தில்லியில் 9ஏ கோட்லா சாலையில் காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைமை அலுவலகம் கட்டப்பட்டது. புதிய அலுவலகத்தை அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும், நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தியும் இன்று (ஜன.15) திறந்துவைத்தார்.
மறைந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் நினைவாக ‘இந்திரா பவன்’ என இந்த அலுவலகத்திற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.