இந்தியா

நீட் இளநிலை கலந்தாய்வு ஒத்திவைப்பு

ராம் அப்பண்ணசாமி

நீட் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று (ஜூன்-6) தொடங்க இருந்த நிலையில், கலந்தாய்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீட் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் நடந்த முறைகேடுகளை முன்வைத்து, இந்த வருடம் நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை ஜூலை 8-ல் நடைபெற இருந்த வேளையில் நீட் கலந்தாய்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

`நீட் இளநிலை விவகாரம் நாளுக்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. பயோலாஜிக்கலாகப் பிறக்காத பிரதமர் மற்றும் பயோலாஜிக்கலாகப் பிறந்த மத்திய கல்வி அமைச்சர் ஆகியோரின் திறமையற்ற, உணர்வற்ற போக்கு இதன் மூலம் உறுதியாகிறது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதுகாப்பற்ற முறையில் அவர்கள் கைகளில் இருக்கிறது’ என்று இந்த விஷயத்தில் பாஜகவைச் சாடியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.

இந்த விவகாரம் குறித்து தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே. அவரது பதிவு பின்வருமாறு:

`மரியாதைக்குரிய உச்ச நீதிமன்றத்தில் வினாத்தாள் கசியவில்லை என்று கூறியுள்ளது மோடி அரசு. இந்தப் பொய் லட்சக்கணக்கான மாணவர்களிடம் கூறப்பட்டுள்ளது, ஆனால் சில இடங்களில் மட்டும் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறியுள்ளது கல்வி அமைச்சகம். இது தவறாக வழிநடத்தும் செயலாகும்.

நீட் இளநிலைத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் கீழ் வினாத்தாள் கசிவு சம்பவம் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’.