இந்தியா

நீட் தேர்வு முடிவுகளில் குழப்பம்: தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

கிழக்கு நியூஸ்

நீட் தேர்வு முடிவுகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தேசிய தேர்வு முகமையிடம் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. கடந்த மே 5-ல் 4,750 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில் என்சிஇஆர்டி புத்தகங்களில் இடம்பெற்ற தவறான தகவல்களின் அடிப்படையில் மாணவர்கள் பதிலளித்த காரணத்தாலும், நேரம் வீணான காரணத்தாலும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 67 மாணவர்கள் முழுமையாக 720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள். ஹரியாணாவில் குறிப்பிட்ட ஒரு தேர்வு மையத்திலிருந்து மட்டும் 6 பேர் 720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள்.

இதில் முறைகேடு நடந்திருப்பதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றச்சாட்டை எழுப்பினார்கள். தேசிய தேர்வு முகமை இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, நீட் தேர்வு முடிவுகள் குறித்து மறு ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய உயர்கல்வித் துறைச் செயலர் சஞ்சய் மூர்த்தி அறிவித்தார்.

நீட் தேர்வு முடிவுகளைத் திரும்பப் பெற்று,நீட் தேர்வை மீண்டும் புதிதாக நடத்த உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அசானுதீன் அமானுல்லா ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தார்கள்.

இந்தக் குளறுபடிகள் தொடர்பாக பதிலளிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், மருத்துவக் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த வழக்கு விசாரணை மீண்டும் ஜூலை 8-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.