ANI
இந்தியா

நீட் முதல் மாநில சிறப்பு அந்தஸ்து வரை..: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதம்

கிழக்கு நியூஸ்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீட் தேர்வு முதல் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவது வரை பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றார்கள். திமுக சார்பில் டி.ஆர். பாலு, திருச்சி சிவா, ஜன சேனாவிலிருந்து பால கிருஷ்ணா, பிஜு ஜனதா தளத்திலிருந்து சஸ்மித் பத்ரா, ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து சஞ்சய் ஜா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அர்ஜுன் ராம் மேக்வால், ராம்தாஸ் அதாவாலே, பிரஃபுல் படேல், சிராக் பாஸ்வான், ஏஐஎம்ஐஎம் எம்.பி. அசாதுதீன் ஒவைசி, பாஜக தேசியத் தலைவரும், எம்.பி.யுமான ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரினார். தெலுங்கு தேசம் இந்த விவகாரத்தில் அமைதி காத்தது வியப்பளித்தது" என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் நீட் பிரச்னை, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவது, மக்களவை துணைத் தலைவர் பதவிக்கான கோரிக்கை உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தினார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் ஆக்கப்பூர்வமானதாக அமைந்ததாக, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். இதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், "ஜனநாயகத்தை வலுப்படுத்த நாம் உறுதிகொண்டுள்ளோம். நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பேசும்போது, வேறு யாரும் குறுக்கிட்டு பேசக் கூடாது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின்போது, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் பேசியபோது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குறுக்கீடுகள் நடந்தன. இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. பிரதமர் பேசும்போது, அவையும் நாட்டு மக்களும் அமைதியாகக் கேட்க வேண்டும்" என்றார்.

நீட் தேர்வு, மதுரை எய்ம்ஸ், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பேச அனுமதி வழங்க வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக டி.ஆர். பாலு தெரிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், செவ்வாய்க்கிழமை நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.