இந்தியா

முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உள்ளன

ராம் அப்பண்ணசாமி

கடந்த ஆகஸ்ட் 11-ல் இரண்டு ஷிஃப்ட்களாக நடந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 24) வெளியாகியுள்ளன. தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியத்தின் இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

2024-2025 கல்வி ஆண்டுக்கான எம்.டி, எம்.எஸ், முதுநிலை டிப்ளமோ உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஆகஸ்ட் 11-ல் நாடு முழுவதும் 500 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் நாடு முழுவதும் 2.3 லட்சம் மருத்துவர்கள் பங்கேற்றனர். இந்தத் தேர்வில் முறைகேடுகள் ஏற்படுவதைத் தடுக்க காலை, மாலை என இரு ஷிஃப்ட்களாக தேர்வுகள் நடைபெற்றன.

இந்நிலையில், தேர்வு நடந்து முடிந்த இரண்டு வாரங்களுக்குள் தேர்வு முடிவுகள் தற்போது தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியத்தின் https://www.natboard.edu.in/ என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் கலந்தாய்வுகளின் தேதிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உள்ளன. இந்த இடங்களுக்கு மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழுவின் www.mcc.nic.in என்ற இணையதளத்தில் கலந்தாய்வு நடத்தப்படும். அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்டது போல, மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கு, அந்தந்த மாநில அரசுகள் கலந்தாய்வுகளை நடத்தும்.