இந்தியா

ஆகஸ்ட் 11-ல் நீட் முதுநிலைத் தேர்வு

கிழக்கு நியூஸ்

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 11-ல் இரு கட்டங்களாக நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 23 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதே காலகட்டத்தில்தான் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் பிரச்னை எழுந்தது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் வினாத் தாள் கசிவு, கருணை மதிப்பெண் எனப் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தேர்வு மீதான நம்பகத்தன்மை குறைந்தது.

இதைத் தொடர்ந்து, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுக்கு முந்தைய நாள் இரவு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்தது.

இந்த நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 11-ல் இரு கட்டங்களாக நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இரு கட்டங்களாக தேர்வு நடத்தப்படுவது குறித்து உரிய நேரத்தில் விவரங்கள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.