இந்தியா

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு 300 நகரங்களில், 1,000 தேர்வு மையங்களில் நாளை (ஜூன் 23) நடைபெறவிருந்தது.

கிழக்கு நியூஸ்

நாடு முழுக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் வினாத் தாள் கசிவு, கருணை மதிப்பெண் எனப் பல்வேறு குளறுபடிகள், தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வு மீதான நம்பகத்தன்மை குறைந்தது. நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்தச் சூழலில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு 300 நகரங்களில், 1,000 தேர்வு மையங்களில் நாளை நடைபெறவிருந்தது. இந்தத் தேர்வை மருத்துவ மாணவர்களுக்கான தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது.

ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ஒத்திவைப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டும், தேர்வு நடைமுறையின் புனிதத் தன்மையைக் காக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

முன்னதாக, தேசிய தேர்வு முகமையின் இயக்குநர் சுபோத் குமார் நீக்கப்பட்டார். இவருக்குப் பதில் பிரதீப் சிங் கரோலா புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது விமர்சனத்துக்கான அடித்தளமாக அமைந்தது. இதுதொடர்புடைய சர்ச்சைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, நாடு முழுக்க நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வு நடைமுறைகளை மேம்படுத்த, இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை மத்திய அரசு இன்று அமைத்தது.