நீட் தேர்வில் முறைகேடு 
இந்தியா

நீட் தேர்வில் முறைகேடு: குஜராத்தில் மூன்று பேர் கைது

யோகேஷ் குமார்

குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் மிகப்பெரிய முறைக்கேடு நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில் 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 5 அன்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்த துஷார் பட், நீட் தேர்வில் தேர்வு மைய துணைக் கண்காளிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் மாணவர்களுக்கு உதவுவதாகக் கூறி பெற்றோர்களிடம் பேரம் பேசியதாகத் தெரிகிறது. மாணவர்களிடம் தெரியாத கேள்விகளுக்கு விடை எழுதாமல் விட்டுவிட்டுச் செல்லும்படி கூறியதாகவும், அதற்கு பதிலாக தானே பதிலை எழுதி தருவதாகவும் கூறி 16 மாணவர்களின் பெற்றோர்களிடம் தலா ரூ. 7 லட்சம் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து துஷாரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இவரும், இவருக்கு உறுதுணையாக இருந்த மேலும் இருவர் என மொத்தம் 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னதாக, பிஹாரில் 13 நபர்கள், ராஜஸ்தானில் 4 நபர்கள், தில்லியில் 3 நபர்கள் நீட் தேர்வில் முறைக்கேடு செய்ததாக கைது செய்யப்பட்டனர்.