இந்தியா

அமீபா நுண்ணுயிரி தொற்று குறித்து பதற்றம் வேண்டாம்: ராதாகிருஷ்ணன்

கேரளாவில் நிலவும் வெப்பமண்டல காலநிலை காரணமாக கோடை காலங்களில் அசுத்தமான நீர் நிலைகளில் இந்த அமீபாவின் பரவல் அதிகமாக இருக்கும்.

ராம் அப்பண்ணசாமி

அமீபா நுண்ணுயிரி தொற்றால், மூளையில் பாதிப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக கேரளாவில் 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்று குறித்து பதற்றப்பட வேண்டாம் என்று பேட்டியளித்துள்ளார் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.

கோடை காலங்களில் ஏரிகள், நதிகள், குளங்கள் போன்றவற்றில் நீரின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட வகையான அமீபா நுண்ணுயிரின் (Naegleria fowleri) புழக்கம் அதிகரிக்கும். இப்படிப்பட்ட பகுதிகளில் குளிக்கும் நபர்களின் மூக்கு வழியாக உடலுக்குள் செல்லும் அமீபா நுண்ணுயிரி, சம்மந்தப்பட்ட நபரின் மூளை நரம்புகளைைத் தாக்கி தலைவலி, உடல் நலக்கோளாறு, வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும்.

அமீபா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டாலும் பல நேரங்களில் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடிவதில்லை. கேரளாவில் நிலவும் வெப்பமண்டல காலநிலையின் காரணமாக கோடை காலங்களில் இந்த அமீபாவின் பரவல் அங்கே அதிகமாக உள்ளது. மேலும் அசுத்தமான நீர் நிலைகளிலும் இந்த நுண்ணுயிரியின் பரவல் அதிகமாக இருக்கும்.

அமீபா தொற்றால் கேரளாவில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து அவசர ஆய்வுக்கூட்டம் நடத்தினார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். இதனைத் தொடர்ந்து அசுத்தமான நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்க பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது அம்மாநில அரசு.

` (கேரளாவில் பரவும்) மூளையத் தாக்கும் அமீபா நுண்ணுயிரி குறித்து பதற்றம் வேண்டாம். தேவையான சுகாதார நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மாநகராட்சிக்கு உட்பட்ட நீச்சல் குளத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்’ என்று இன்று காலை பேட்டியளித்தார் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.

`கேரளாவில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்ததாக வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. தமிழ்நாட்டில் இத்தகு பரவல்கள் ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும். இந்த நுண்ணுயிர் குழந்தைகளை தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளதால், மக்கள் உயிர்களைக் காக்கும் நடவடிக்கைகளில் கவனத்தை செலுத்துமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன்’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி