ANI
ANI
இந்தியா

ராகுல் காந்தி போல் செயல்படாதீர்: பிரதமர் மோடி

ராம் அப்பண்ணசாமி

பாஜக கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் இன்று தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற மோடிக்கு பாஜக கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் பாராட்டு தெரிவித்தனர்.

`பாஜக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற விதிகளையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் பின்பற்ற வேண்டும். பிரச்சனைகளை ஆக்கப்பூர்வமாக எழுப்ப வேண்டும்’ என்று எம்.பி.க்களிடம் மோடி பேசியதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜூ. இது குறித்து பேசிய ரிஜிஜூ,

`ஒவ்வொரு எம்.பி.யும் நாட்டுக்கு சேவை செய்யவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டுக்கு சேவை செய்வதே நம் முதல் கடமை. ஓவ்வொரு எம்.பி.யும் தங்கள் தொகுதி பற்றிய பிரச்சனையை அவையின் விதிகளுக்கு உட்பட்டு எழுப்ப வேண்டும். முக்கியப் பிரச்சனைகள் குறித்த நிபுணத்துவத்தை எம்.பி.க்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி (மக்களவையில்) சபாநாயகருக்குத் தன் முதுகைக் காட்டி, விதிகளை மீறி, சபாநாயகரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதைப் போல நம் தேஜ கூட்டணியினர் நடந்து கொள்ளக்கூடாது.

ஓவ்வொரு எம்.பி.யும் தங்கள் குடும்பத்துடன் (டெல்லியில் உள்ள) பிரதம அமைச்சர் அருங்காட்சியகத்துக்குச் சென்று பார்வையிட வேண்டும். அரசியலுக்காக அல்ல. ஒட்டு மொத்த தேசமும் ஒவ்வொரு பிரதமரும் என்ன பங்களித்துள்ளனர் என்பதை நாட்டு மக்கள் அறிந்துகொண்டு, அவற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்’, என்று பிரதமர் மோடி எம்.பி.க்களிடம் பேசினார்.