இந்தியா

இந்திய கலாச்சாரமே அடிப்படை: ஹிந்தி தலைப்பு சர்ச்சைக்கு என்.சி.இ.ஆர்.டி. விளக்கம்!

நாட்டின் வளமான கணித பாரம்பரியத்தின் மீது குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இந்த தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

ஆங்கில பாடப் புத்தகங்களுக்கு ஹிந்தி தலைப்புகள் வைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், அது தொடர்பாக என்.சி.இ.ஆர்.டி. விளக்கம் அளித்துள்ளது.

சிபிஎஸ்இ பாட திட்டத்திற்கான புத்தகங்கள், மத்திய அரசின் அமைப்பான என்.சி.இ.ஆர்.டி.யால் வெளியிடப்படுகின்றன. 2-ம் வகுப்பு ஆங்கிலப் பாட புத்தகத்தின் தலைப்பு மிருதங் எனவும், 3-ம் வகுப்பு புத்தகத்தின் தலைப்பு சந்தூர் எனவும், 6-ம் வகுப்பு புத்தகத்தின் தலைப்பு பூர்வி எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை முன்வைத்து, கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி மற்றும் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் ஆகியோர், மத்திய அரசு ஹிந்தி திணிப்பில் ஈடுபடுவதாகக் கூறி கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு விளக்கமளித்து என்.சி.இ.ஆர்.டி.யின் எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், `இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் அறிவியல் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு, ஹிந்தி மட்டுமல்லாமல் பல இந்திய மொழிகளில் பாடப் புத்தகங்களுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கான ஆங்கிலப் பாடப் புத்தகங்கள் கர்நாடக இசையுடன் தொடர்புடைய, பரவலாக அறியப்பட்ட வாத்தியமான மிருதங்கத்திலிருந்து பெறப்பட்ட `மிருதங்’ என்ற தலைப்பில் உள்ளது.

அதேபோல, இந்தியாவின் வளமான கணித பாரம்பரியத்திலிருந்தே `கணித் பிரகாஷ்’ என்ற பெயர் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளமான கணித பாரம்பரியத்தின் மீது குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இந்தத் தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கணிதம் அல்லது ஆங்கில மொழிப் பாடப்புத்தகங்கள் இந்தியப் பெயர்களைக் கொண்டிருப்பது, இந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரத்தின் மீதான பெருமையை வளர்ப்பது மட்டுமல்லாமல், நமது வளமான கலாச்சார மற்றும் அறிவியல் பாரம்பரியம் ஆகியவை மீதான ஆர்வத்தையும் உருவாக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.