விமான விபத்துப் பகுதி ANI
இந்தியா

வருத்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: விமான விபத்து குறித்து பிரதமர் மோடி

இந்த சோகமான நேரத்தில், விமான விபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் என் எண்ணங்கள் உள்ளன.

ராம் அப்பண்ணசாமி

குஜராத்தின் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து விமானப் பணியாளர்கள் உள்பட 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.

விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விமானத்திற்குள் இருந்தவர்களின் நிலை குறித்து கவலை அளிக்கும் விதமாக தகவல்கள் வெளிவருகின்றன.

இந்நிலையில், இந்த விமான விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,

`அஹமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதோடு மட்டுமல்லாமல் வருத்தப்படுத்தியுள்ளது. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த சோகமான நேரத்தில், விமான விபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் என் எண்ணங்கள் உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகப் பணியாற்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் [நான்] தொடர்பில் இருக்கிறேன்’ என்றார்.

விமான விபத்து தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,

`பல பிரிட்டன் குடிமக்களை ஏற்றிக்கொண்டு லண்டனுக்குப் புறப்பட்ட விமானம் இந்தியாவின் அஹமதாபாத் நகரில் விபத்துக்குள்ளாகும் அழிகரமான காட்சிகள் வெளியாகியுள்ளன.

நிலைமை குறித்த தகவல் எனக்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது, இந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன’ என்றார்.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு விமான விபத்து குறித்து தன் எக்ஸ் கணக்கில் கூறியதாவது,

`அஹமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம். தனிப்பட்ட முறையில் நான் நிலைமையைக் கண்காணித்து வருகிறேன், மேலும் அனைத்து விமானப் போக்குவரத்து மற்றும் அவசரகால மீட்பு நிறுவனங்களும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன, மேலும் மருத்துவ மற்றும் நிவாரண உதவிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விமானத்தில் இருந்த நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன’ என்றார்.