கோப்புப்படம் 
இந்தியா

மோடி ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு: ஜூன் 9-ல் பதவியேற்பு

கிழக்கு நியூஸ்

பிரதமர் மோடியை ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்படி, பிரதமர் மோடி ஜூன் 9-ல் மீண்டும் பிரதமராகப் பதவியேற்கிறார்.

தில்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழியப்பட்டார். இதை வழிமொழிந்து சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், குமாரசாமி, சிராஜ் பாஸ்வான் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.

இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதன்படி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிரதமர் மோடியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இதன்படி, ஜூன் 9 மாலை 6 மணிக்கு மீண்டும் பிரதமராகப் பதவியேற்கிறார் பிரதமர் மோடி. ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்கிறார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரும் நேரத்தில், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தனது இல்லத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியானது. தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் ஒதுக்கப்படும் இலாகா குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

ஜூன் 9-ல் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராகப் பதவியேற்கும்போது, ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.