பைக் டாக்சிகள் மீதான முழுமையான தடையை நீக்கவும், முறையான ஒழுங்குமுறை கொள்கையை உடனடியாக அறிமுகப்படுத்தவும் கர்நாடக அரசை வலியுறுத்தி, அம்மாநிலம் முழுவதிலும் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட பைக் டாக்சி ஓட்டுநர்கள் இன்று (ஜூன் 21) பெங்களூருவில் உள்ள அரசு தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்தினார்கள்.
மைசூரூ, மண்டியா, ஹாசன், தாவணகெரே, துமகூரூ, ராமநகரா, ஷிமோகா மற்றும் கனகபுரா உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த பைக் டாக்சி ஓட்டுநர்கள் இந்த அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். இது பணி என்பதோடு மட்டுமல்லாமல், உயிர்வாழ்வதற்கான போராட்டம் என்று அவர்கள் விவரித்தனர்.
"தடைக்கு முன்பு, என் குடும்பத்தை நடத்துவதற்கு போதுமான அளவு சம்பாதிக்க முடிந்தது. தற்போது பணம் இல்லை, ஒவ்வொரு நாளும் உயிர்வாழ்வதற்கான போராட்டத்தை உணர்கிறேன். நாங்கள் உணவைத் தவிர்க்கிறோம், என் குழந்தையின் பள்ளி கட்டணம் நிலுவையில் உள்ளது’ என்று இந்த பேரணியில் கலந்துகொண்ட துமகூருவைச் சேர்ந்த ஒரு பைக் டாக்சி ஓட்டுநர் ரமேஷ் இந்தியா டுடேவிடம் கூறியுள்ளார்.
வருமானத்திற்காக கர்நாடகத்தில் பைக் டாக்சிகளை நம்பியிருந்த ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கையை இந்தத் தடை சீரழித்துள்ளதாக ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.
இந்த தடையால் பல குடும்பங்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், வீட்டு வாடகை செலுத்தவும், குழந்தைகளைப் பள்ளியில் படிக்க வைக்கவும் முடியாமல் வறுமையில் வாடுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பைக் டாக்சிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையின் தாக்கத்தை பயணிகளும் உணர்ந்துள்ளனர். பைக் டாக்சிகள் இல்லாமல், பயணச் செலவுகள் அதிகரித்துள்ளன. மேலும் பல நகரங்கள், குறிப்பாக சிறு நகரங்களில் பல்வேறு இடங்களுக்கான போக்குவரத்து இதனால் பாதிப்பை சந்தித்துள்ளது.
தெளிவான ஒழுங்குமுறை விதிகள் இல்லாததைக் காரணம் காட்டி ரேபிடோ, ஓலா மற்றும் உபர் போன்ற பைக் டாக்ஸிகளின் செயல்பாடுகளுக்குத் தடைவிதித்து கர்நாடக அரசாங்கம் பிறப்பித்த உத்தரவை, கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.