கோப்புப்படம் 
இந்தியா

தேவைப்பட்டால் புல்டோசர்கள் பயன்படுத்தப்படும்...: வன்முறை குறித்து எச்சரிக்கும் மஹா. முதல்வர்!

"ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்ட ஈடு வன்முறையாளர்களிடமிருந்து பெறப்படும்."

கிழக்கு நியூஸ்

நாக்பூர் வன்முறையில் ஏற்பட்ட சேதங்களுக்கு வன்முறையாளர்களிடமிருந்து நஷ்ட ஈடு கோரப்படும் என மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் ஔரங்கசீப் கல்லறை அகற்ற வேண்டும் என்ற குரல்கள் கடந்த சில நாள்களாக வலதுசாரி அமைப்புகளிடமிருந்து வலுத்து வருகிறது. கடந்த மார்ச் 17-ல் இஸ்லாமியர்களின் புனித நூல் கொழுத்தப்பட்டதாக வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து, நாக்பூரில் பெரும் வன்முறை வெடித்தது.

நாக்பூர் சென்று நேரில் ஆய்வு செய்த ஃபட்னவீஸ் இதுபற்றி கூறுகையில், "இன்று காவல் துறையினருடன் நாக்பூர் சென்று ஆய்வு மேற்கொண்டேன். நடந்த ஒட்டுமொத்த சம்பவங்களும் நிகழ்வுகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. ஔரங்கசீப் கல்லறையின் மாதிரி எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால், குர்ஆன் வாசகம் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதைத் தொடர்ந்து அங்கு கூடிய பலர் கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டார்கள். காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

சிசிடிவியின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதுவரை 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் பலரைக் காவல் துறையினர் கைது செய்வார்கள்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படும். சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்பியவர்களும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவார்கள். 68 சமூக ஊடகப் பதிவுகள் அடையாளம் காணப்பட்டு அவை அழிக்கப்பட்டுள்ளன.

ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்ட ஈடு வன்முறையாளர்களிடமிருந்து பெறப்படும். அவர்கள் பணம் கொடுக்கத் தவறினால், அவர்களுடையச் சொத்துகள் விற்கப்படும். தேவைப்பட்டால் புல்டோஸர்களும் பயன்படுத்தப்படும்" என்றார் தேவேந்திர ஃபட்னவீஸ்.