ஆர்.எஸ்.எஸ். கீதத்தை சட்டப்பேரவையில் பாடியதற்காக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, காந்தி குடும்பத்தின் மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் தனக்கு அசைக்க முடியாத விசுவாசம் இருப்பதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரூ சின்னசாமி மைதானத்திற்கு அருகே ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த ஆக. 22 அன்று நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய அம்மாநில துணை முதல்வரும் காங்கிரஸ் மாநிலத் தலைவருமான டி.கே. சிவக்குமார், திடீரென ஆர்.எஸ்.எஸ். கீதத்தைப் பாடி அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
`நமஸ்தே சத வத்சலே மாத்ருபூமே’ என்று தொடங்கும் ஆர்.எஸ்.எஸ். பாடலின் முதல் வரியை சிவக்குமார் பாடியது சட்டப்பேரவை உறுப்பினர்களை வியப்பில் ஆழ்த்தியது. இருப்பினும், சிவக்குமாரின் இந்த செயல் கடும் விமர்சனங்களை சந்தித்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களிடம் விளக்கம் அளித்துள்ள சிவக்குமார், தனது செயலால் யாராவது புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்பதாகக் கூறினார். அதேநேரம் அரசியல் அழுத்தம் காரணமாக மன்னிப்பு கேட்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.
குறிப்பாக, சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவைச் சேர்ந்த ஆர். அசோகாவை விமர்சிப்பதற்காகவே ஆர்.எஸ்.எஸ். கீதத்தைப் பாடியதாகவும், அந்த அமைப்பைப் புகழ்வதற்காக அதை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், `நான் கருத்து தெரிவித்து அவர்களை (எதிர்க்கட்சி) இழுக்க முயற்சித்தேன். எனது நண்பர்கள் சிலர் அதை அரசியலாக்கி, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். காந்தி குடும்பத்தை யாராலும் கேள்வி கேட்க முடியாது. பிறப்பால் நான் காங்கிரஸ்காரன். ஒரு காங்கிரஸ்காரனாகவே நான் இறப்பேன்.
யாராவது புண்பட்டிருந்தால், அவர்களுக்காக நான் வருந்துகிறேன். அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்’ என்றார்.