பிரதமர் மோடி (கோப்புப்படம்) ANI
இந்தியா

எனது பேச்சு இண்டியா கூட்டணிக்குப் பதற்றத்தைத் தந்துள்ளது: பிரதமர் மோடி

கிழக்கு நியூஸ்

தனது 90 நொடி உரை இண்டியா கூட்டணியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் கூறியதாவது:

"நான் நேற்று முன்தினம் ராஜஸ்தான் வந்தபோது, எனது 90 நொடி உரை மூலம் நாட்டு மக்களிடம் சில உண்மைகளை முன்வைத்தேன். இது ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உங்களுடைய சொத்துகளைப் பறிமுதல் செய்து, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களிடம் காங்கிரஸ் மறுவிநியோகம் செய்யும் என்கிற சதித் திட்டத்தை நான் வெளிப்படுத்தினேன். அவர்களுடைய வாக்கு வங்கி அரசியலை நான் அம்பலப்படுத்தினேன். உண்மையைக் கண்டு காங்கிரஸ் ஏன் அஞ்சுகிறது?" என்றார் பிரதமர் மோடி.

முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மற்றும் பான்ஸ்வாரா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இரு நாள்களுக்கு முன்பு பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, "காங்கிரஸ் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்திருப்பது மிகத் தீவிரமான விஷயம். காங்கிரஸ் ஆட்சியமைத்தால், அனைவருடைய சொத்து விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்படும். தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்குச் சொந்தமான தங்கத்தைக் கணக்கெடுத்து, அவை மறுவிநியோகம் செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்கள். உங்களுடைய தாலியைக்கூட அவர்கள் விட்டுவைக்க மாட்டார்கள்.

நீங்கள் இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? உங்களுடைய சொத்தைப் பறிமுதல் செய்ய அரசுக்கு உரிமை உள்ளதா? தங்கம் என்பது வெறும் காட்சிப் பொருளல்ல. பெண்களின் சுயமரியாதையுடன் தொடர்புடையது. அவர்களுடைய தாலி கனவுகளுடன் தொடர்புடையது. இதைப் பறிக்க நினைக்கிறீர்களா?

மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின்போது நாட்டின் வளத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை என்று காங்கிரஸ் கூறியது. அதாவது, அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்து, அதை அதிக குழந்தைகளைக் கொண்டுள்ளவர்கள் மத்தியிலும், ஊடுருவி வந்தவர்கள் மத்தியிலும் மறுவிநியோகம் செய்வார்கள்.

கடின உழைப்பால் நீங்கள் ஈட்டிய பணத்தை, ஊடுருவி வந்தவர்களிடம் கொடுக்கலாமா? இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?" என்று பேசியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

இந்த நிலையில், தனது பேச்சு குறித்து பிரதமர் விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலை அம்பலப்படுத்தியிருப்பதாக பிரதமர் பேசியிருக்கிறார்.