PRINT-91
இந்தியா

மும்பையில் கனமழை: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

ராம் அப்பண்ணசாமி

இன்று (ஜூலை 8) அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருவதை அடுத்து, மும்பை மாநகருக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம். கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, இன்று நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மும்பை மாநகரத்தில் கனமழை பெய்து வருவதை அடுத்து அங்குள்ள சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் இன்று காலை முதல் மும்பை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. குறைந்தபட்சமாக கொலாபா பகுதியில் 83 மி.மீ மழையும், அதிகபட்சமாக சாண்டாக்ரூஸ் பகுதியில் 267 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் வேளையில், `இன்று காலை 2 மணியில் இருந்து 6 மணி வரை 270 மி.மீ மழை பெய்துள்ளது. இதனால் மும்பைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரங்களில் மேலும் அதிகமான மழையை எதிர்பார்க்கலாம். நாளைய தினத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என்று இந்திய வானிலை மையத்தின் இயக்குநர் சுனில் காம்பிளே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

`கனமழையால் தாழ்வான சில பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ரயில் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ள காரணத்தால் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவசரக் கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க அதிகாரிகள் களத்தில் உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது மும்பை மாநகராட்சி.