கோப்புப்படம் ANI
இந்தியா

400 கிலோ ஆர்டிஎக்ஸ்: வெடிகுண்டு மிரட்டலால் உச்சகட்ட பாதுகாப்பில் மும்பை நகரம்! | Mumbai |

"வாகனங்களில் 34 மனித வெடிகுண்டுகள் தயாராக இருப்பதாகவும்..."

கிழக்கு நியூஸ்

34 வாகனங்களில் மனித வெடிகுண்டுகள் தயாராக இருப்பதாக மும்பை போக்குவரத்துக் காவல் கட்டுப்பாட்டு அறை உதவி எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த மும்பை நகரமே உச்சகட்ட பாதுகாப்பில் உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவின் 10 நாள் கொண்டாட்டம் நாளை (சனிக்கிழமை) நிறைவடைகிறது. விநாயகர் சிலைகளைக் கரைக்கும் நிகழ்வு மும்பை முழுக்க நாளை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மும்பை காவல் துறைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

காவல் துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

"விநாயகர் சதுர்த்தியின் 10-வது நாள் விழாவை முன்னிட்டு, காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், மும்பை போக்குவரத்துக் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் செய்தி வந்தது.

மிரட்டல் தொடர்பாக குற்றப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட விசாரணை அமைப்புகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன" என்றார்.

மிரட்டல் விடுத்தவர் தன்னை லஷ்கர்-ஏ-ஜிஹாதி என்று அடையாளப்படுத்தியுள்ளார். 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாகனங்களில் 34 மனித வெடிகுண்டுகள் தயாராக இருப்பதாகவும் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் 1 கோடி பேர வரை கொல்லப்படலாம் என்றும் தனது மிரட்டலில் அவர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, மும்பை நகரம் முழுக்க பலத்த பாதுகாப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

"நம் பாதுகாப்புப் படைகள் எப்படிப்பட்ட அச்சுறுத்தலாக இருந்தாலும் அதைக் கையாளும். அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறோம்" என்றார் காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர்.

வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம் என காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Mumbai | Bomb Threat | Vinayagar Chathurthi | Vinayagar Chathurthi Festival | Mumbai Police