ஐஸ்-கிரீமில் மனித விரல்: உற்பத்தி நிறுவனத்தின் உரிமம் ரத்து ANI
இந்தியா

ஐஸ்-கிரீமில் மனித விரல்: உற்பத்தி நிறுவனத்தின் உரிமம் ரத்து

இது தொடர்பாக யம்மோ ஐஸ்-கிரீம் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

யோகேஷ் குமார்

ஐஸ்-கிரீமில் மனித விரல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் மருத்துவர் ஒருவர் சமீபத்தில் ஆன்லைன் மூலம் ஐஸ்-கிரீம் வாங்கியுள்ளார். ஐஸ்-கிரீமில் பார்ப்பதற்கு முந்திரி போல ஏதோ இருந்திருக்கிறது. அவரும் முந்திரி என நினைத்து அதை அருந்தியிருக்கிறார். ஆனால், பிறகு அது முந்திரயல்ல என்று தெரிந்தவுடன் அவர் அதைக் கீழே துப்பியுள்ளார்.

மருத்துவர் என்பதால், அது மனித விரல் என்பதை அவரால் எளிதில் அடையாளம் காண முடிந்தது. இதைத் தொடர்ந்து, அந்த விரலைப் பத்திரமாக எடுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, அவர் வாங்கிய யம்மோ ஐஸ்-கிரீம் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனம் புனேவில் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதன் பிறகு இச்சம்பவம் தொடர்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் அந்த உற்பத்தி நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், விற்பனையாளரின் வளாகத்தையும் ஆய்வு செய்து, அங்கிருந்து மாதிரிகளை சேகரித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த ஐஸ்-கிரீம் விற்பனையாளரின் வளாகத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு முடிவாக மலாத் என்ற இடத்தில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அந்த இடத்தில் இருந்தே மும்பையில் உள்ள மருத்துவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

யம்மோ ஐஸ்-கிரீம் நிறுவனம் மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்து வந்தது தெரியவந்த நிலையில், யம்மோ ஐஸ்-கிரீம் நிறுவனம் சம்பந்தப்பட்ட மூன்றாம் தரப்பு உற்பத்தி நிறுவனத்துடனான உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது.