உத்தர பிரதேசத்தில் நடந்த வி.எச்.பி. நிகழ்வில் கலந்துகொண்டு, இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியை தகுதி நீக்கம் செய்யும் வகையிலான பணிகளை தொடங்கியுள்ளனர் மக்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள்.
அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஷேகர் குமார் யாதவ் சமீபத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சட்டப்பிரிவு நடத்திய `பொது சிவில் சட்டம்’ தொடர்பான ஒரு நிகழ்வில் கலந்துகொண்டார். அதில் பேசிய நீதிபதி ஷேகர் யாதவ், `பெரும்பான்மை (ஹிந்துக்கள்) விருப்பப்படி இந்தியா செயல்படும். சிறு வயதில் இருந்து தங்களுக்கு முன்பு விலங்குகள் கொல்லப்படுவதைப் பார்த்து வளரும் அவர்களின் (இஸ்லாமியர்கள்) குழந்தைகள் எப்படி அன்புடனும், சகிப்புத்தன்மையுடனும் இருப்பார்கள்’ என்றார்.
இந்நிலையில் குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராகப் பேசிய இந்த நீதிபதியை தகுதி நீக்கம் செய்யும் வகையிலான தீர்மானத்தைக் கொண்டு வர நோட்டீஸை முன்மொழிந்துள்ளார் தேசிய மாநாடு கட்சியைச் சேர்ந்த ஸ்ரீநகர் எம்.பி. ருஹுல்லா மெஹ்தி. உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. நீதிபதிகளை தகுதி நீக்கம் செய்யும் தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்ய 100 எம்.பி.க்களின் ஆதரவு அவசியமாகும்.
ருஹுல்லா மெஹ்தி முன்மொழிந்துள்ள இந்த நோட்டீஸில் இதுவரை சுதாமா பிரசாத், ராஜ்குமார் ரோட், அசாதுதீன் ஓவைசி உள்ளிட்ட 7 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நோட்டீஸுக்கான ஆதரவை வழங்க காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளார் ருஹுல்லா மெஹ்தி.
இது தொடர்பாக இன்று (டிச.10) விளக்கமளித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, `இந்த விவகாரம் தொடர்பான விவரங்களை (அலஹாபாத்) உயர் நீதிமன்றத்திடம் கேட்டுள்ளோம். இந்த விஷயம் தற்போது பரிசீலனையில் உள்ளது’ என்றார்.