இந்தியா

அயோத்தியிலேயே பாஜகவை வீழ்த்திய அவதேஷ் பிரசாத் யார்?

ராம் அப்பண்ணசாமி

ஜூன் 4-ல் வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்குப் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போனதற்கு முக்கியக் காரணம் உத்தரப் பிரதேசம். 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் பெருவாரியான இடங்களைப் பெற்றுதான் கடந்தமுறையும், அதற்குமுன்பும் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது.

ஆனால் இந்த முறை உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு வெறும் 33 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இண்டியா கூட்டணியில் சமாஜ்வாதிக்கு 37 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்களும் கிடைத்தன. இவற்றைவிட பாஜகவினருக்கு அதிர்ச்சியளித்த மற்றொரு விஷயம் அங்கிருந்த ஃபைஸாபாத் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளருக்குக் கிடைத்த தோல்வி.

ஃபைஸாபாத் தொகுதிக்குள்தான் அயோத்தி ராமர் கோவில் வருகிறது. இந்தத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் தலித் சமூகத்தை சார்ந்த 77 வயதான அவதேஷ் பிரசாத் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அரசியலில் ஆழமான அனுபவம் பெற்ற அவர் சமாஜ்வாதி கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் அக்கட்சியின் உறுப்பினராக இருப்பவர். 9 முறை எம்.எல்.ஏ.வாகப் பதவி வகித்துள்ளார்.

ஜூன் 4 நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த அவதேஷ் பிரசாத், இறுதியில் தன்னை எதிர்த்து நின்ற பாஜக வேட்பாளர் லல்லு சிங்கை 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

21 வயதில் அரசியலில் நுழைந்த அவதேஷ் பிரசாத், இந்த வெற்றியின் மூலம் 77 வயதில் முதல்முறையாக மக்களவைக்குள் நுழைகிறார்.