இந்தியா

வக்ஃபு சட்டதிருத்த மசோதா கருத்துக்கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம்: எம்.பி.க்குக் காயம்

சட்டதிருத்த மசோதா தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சிலர் தங்களது கருத்துகளை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் முன்வைத்தனர்.

ராம் அப்பண்ணசாமி

வக்ஃபு சட்டதிருத்த மசோதா குறித்து தில்லியில் இன்று (அக்.22) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் நடந்த வாக்குவாதத்தின் முடிவில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

மக்களவையில் கடந்த ஆக.8-ல் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜூ வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

மத்திய வக்ஃபு கவுன்சில், மாநில வக்ஃபு வாரியங்களில் பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவும், மாநில வக்ஃபு வாரியங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த தகவல்களை மத்திய அரசு இணையதளத்தில் பதிவேற்றவும், வக்ஃபு சொத்துக்களை சர்வே மேற்கொள்ளும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கவும், இந்த சட்டத்திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டது.

வஃக்பு சட்டதிருத்த மசோதாவை மக்களவையில் விமர்சித்துப் பேசிய எதிர்க்கட்சிகள், இதை நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.

இந்த கூட்டுக்குழுவின் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் தில்லியில் நேற்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும், பாஜக எம்.பி.க்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் இன்று (அக்.22) நடைபெற்ற கூட்டுக்குழு கூட்டத்தில், சட்டதிருத்த மசோதா தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சிலர் தங்களது கருத்துகளை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் முன்வைத்தனர். நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்துக்கு வெளியாட்களை அழைக்க வேண்டிய காரணத்தை கேட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாஜக எம்.பி.க்களிடம் வாக்குவாதம் மேற்கொண்டனர்.

ஒரு கட்டத்தில் பாஜக எம்.பி. அபிஜித் கங்கோபாத்யாய உடனான வாக்குவாதம் முற்றி, கோபத்தில் திரிணாமூல் எம்.பி. கல்யாண் பானர்ஜி மேஜையில் இருந்த கண்ணாடி தண்ணீர் பாட்டில் மீது ஓங்கிக் குத்தியதில், அவரது கையில் வலது காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.

இதன்பிறகு அடுத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பங்கேற்க கல்யாண் பானர்ஜிக்கு தடை விதித்தார் குழுத் தலைவர் ஜகதாம்பிகா பால்.