ANI
இந்தியா

வரலாற்றிலேயே அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட நீதிபதி..: டி.ஒய். சந்திரசூட்

பல நேரங்கள் நாங்கள் கடினமான முடிவுகளை எடுத்துள்ளோம். ஆனால் எங்களுக்குள் கருத்துவேறுபாடுகள் என்பது இருந்ததில்லை.

ராம் அப்பண்ணசாமி

வரலாற்றிலேயே அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட நீதிபதியாக நான் இருப்பேன். திங்கட்கிழமை முதல் என்னை ட்ரோல் செய்த அனைவருக்கும் வேலை இல்லாமல் போய்விடும் என தன் பிரிவு உபசார விழாவில் நகைச்சுவையாகப் பேசியுள்ளார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்.

கடந்த இரண்டு வருடங்களாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்த டி.ஒய். சந்திரசூட் வரும் நவ.10-ல் தன் பதவியில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார். ஆனால், நேற்றுதான் (நவ.8) சந்திரசூட்டின் அதிகாரபூர்வ கடைசி பணி நாளாகும்.

இதனால், தலைமை நீதிபதி சந்திரசூட், அடுத்த தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட பிரிவு உபசார அமர்வு நேற்று நடந்தது. இந்த அமர்வில் சந்திரசூட் பேசியவை பின்வருமாறு,

`எது என்னை முன்நோக்கிச் செல்ல வைக்கிறது என நீங்கள் கேட்டீர்கள். இந்த நீதிமன்றம்தான் என்னை முன்நோக்கிச் செல்ல வைத்தது. ஏதாவது விஷயத்தை கற்றுக்கொள்ளாமலும், சமூகத்துக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்காமலும் ஒரு நாளும் இருந்ததில்லை.

யார் என்று தெரியாத நபர்களுக்காகவும், எப்போதும் சந்திக்காத நபர்களுக்காவும், தேவை உள்ளவர்களுக்காவும் சேவை செய்ததைவிட மிகப் பெரிய உணர்வு வேறு எதுவுமே இல்லை. பல நேரங்கள் நாங்கள் (நீதிபதிகள்) கடினமான முடிவுகளை எடுத்துள்ளோம். ஆனால் எங்களுக்குள் கருத்துவேறுபாடுகள் என்பது இருந்ததில்லை. அமைப்பின் (உச்ச நீதிமன்றம்) நலனுக்காகவே நாங்கள் பணியாற்றினோம்.

மிகவும் முக்கியமாக எங்களில் யாருக்குமே தனிப்பட்ட திட்டங்கள் இருந்ததில்லை. மேலும், வரலாற்றிலேயே அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட நீதிபதி நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன். திங்கட்கிழமை முதல் அவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசனையாக உள்ளது. என்னை ட்ரோல் செய்த அனைவருக்கும் வேலை இல்லாமல் போய்விடும்’ என்றார்.