இந்தியா

ஒடிஷா முதல்வராகிறார் மோகன் சரண் மாஜி!

கிழக்கு நியூஸ்

ஒடிஷா முதல்வராக பாஜக எம்எல்ஏ மோகன் சரண் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணை முதல்வர்களாக கேவி சிங் தேவ் மற்றும் பிரவாதி பரீடா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஒடிஷாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை இடங்களைக் காட்டிலும் கூடுதலாக 4 இடங்கள் பெற்று பிஜு ஜனதா தள ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

பாஜக 78 இடங்களிலும், பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றார்கள்.

ஒடிஷாவிலிருந்து பிரபலமான முகங்களான தர்மேந்திர பிரதான் மற்றும் ஜுவல் ஓரம் ஆகியோர் மத்திய அமைச்சரவைக்குத் தேர்வானார்கள்.

இந்த நிலையில், ஒடிஷா முதல்வரைத் தேர்வு செய்ய பாஜக சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் புவனேஷ்வரில் இன்று கூடியது. ராஜ்நாத் சிங் மற்றும் பூபேந்திர யாதவ் மேற்பார்வையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் 4 முறை எம்எல்ஏ ஆன மோகன் சரண் மாஜி ஒடிஷா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். கேவி சிங் தேவ் மற்றும் பிரவாதி பரீடா ஆகியோர் துணை முதல்வர்களாக இருப்பார்கள் என ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

பழங்குடியினர் பிரச்னைக்குக் குரல் கொடுப்பவராக அறியப்படும் மாஜி, கியோன்ஜார் தொகுதியில் 11,577 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மோகன் சரண் மாஜி பிரதமர் மோடி முன்னிலையில் ஒடிஷா முதல்வராக நாளை பதவியேற்கிறார்.