இந்தியா

மோடியின் சீனாவுக்கான உத்தரவாதம் தொடர்கிறது: கார்கே குற்றச்சாட்டு!

மே 2020-ல் லடாக் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலில், 20 இந்திய வீரர்கள் மரணமடைந்தனர்

ராம் அப்பண்ணசாமி

ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளில் வெளிவந்த, லடாக்கில் சீனா ஊடுருவியதைக் காட்டும் செயற்கைக் கோள் புகைப்படங்களை மேற்கோள்காட்டி, `சீனாவுடனான இந்த விவகாரத்தில் மோடியின் அரசாங்கம் நாட்டுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே.

`2020 வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பாங்காக் சோ ஏரிக்கு அருகே இருந்த நிலத்தில், சீனா எவ்வாறு ராணுவ தளத்தை அமைத்தது’ என்று எக்ஸ் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார் கார்கே. மேலும், `பிரதமர் மோடி உண்மை நிலையை நாட்டு மக்களிடம் இருந்து மறைக்கிறார்’ என்றும் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார் கார்கே.

2020 மே மாதம் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்தனர். இரு தரப்புக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தபோதும் இந்தப் பிரச்சனை முழுவதுமாக முடிவுக்கு வரவில்லை.

`இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சிரிஜாப் பகுதியை ஆக்கிரமித்து அதில் ராணுவ தளத்தை கட்டியுள்ளது சீனா. இந்தியா-சீனா எல்லைப்பகுதியான எல்ஏசி-யில் முந்தைய நிலையை பராமரிக்காததற்கு மோடி அரசாங்கமே பொறுப்பு. டெப்சாங் சமவெளி, டெம்சோக், கோக்ரா நீரூற்று பகுதிகளில் இருந்த 65 ரோந்து முனைகளில் 26-ஐ நாம் இழந்துள்ளோம்’ என்று தன் நீண்ட பதிவில் குற்றம்சாட்டியுள்ளார் மல்லிகார்ஜூன் கார்கே.

`மோடியின் சீனாவுக்கான உத்தரவாதம் தொடர்கிறது’ என்று குறிப்பிட்டுள்ள கார்கே, `எல்ஏசி பகுதியில் உள்ள (இந்தியா-சீனா) எல்லையின் நிலைமை குறித்து நாட்டுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்’ என்றும் பதிவிட்டுள்ளார்.