PRINT-97
இந்தியா

கடந்த தேர்தல்களை விட குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்த பிரதமர் மோடி

ராம் அப்பண்ணசாமி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. மத்தியில் ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் 240 இடங்களைப் பெற்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

அதன் பிரதான கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது பாஜக.

இந்த தேர்தலில் பாஜகவின் பிரதான முகமும், அதன் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்டார். மோடியை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் போட்டியிட்டார்.

மூன்றாவது முறையாக அதிக வாக்குகள் பெற்று வாரணாசி தொகுதியில் சுலபமாகப் பிரதமர் மோடி வெற்றி பெற்றுவிடுவார் எனப் பலரும் எண்ணிக் கொண்டிருந்தபோது, நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் முதல் இரண்டு சுற்றுகளில் மோடியை விட அதிக வாக்குகள் பெற்று பாஜகவினருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் அஜய் ராய்.

கிட்டத்தட்ட 6000 வாக்குகள் மோடியை விட அதிகமாகப் பெற்று அஜய் ராய் முன்னணியில் இருந்தார். இருவருக்கும் இடையிலான இந்த வாக்கு வித்தியாசம் சில நிமிடங்களிலேயே தேசிய அளவில் வைரலானது. வாரணாசி தொகுதியும் அதிக அளவில் கவனம் பெற ஆரம்பித்தது.

ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் அஜய் ராயை விட, மோடி அதிக வாக்குகள் பெற ஆரம்பித்தார். இறுதியில் 1.52 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அஜய் ராயை வீழ்த்தி வாரணாசி தொகுதியை தக்க வைத்துக் கொண்டார் பிரதமர் மோடி.

கடந்த தேர்தல்களில் ஒப்பிடும்போது இந்த முறை மோடியின் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவு. 2014 தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கெஜ்ரிவாலை 3.71 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்ட மோடி, 2019 தேர்தலில் 4.79 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பிரதமர் மோடி குஜராத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் 2014 ஆம் மக்களவைத் தேர்தல் முதல் உபி.யின் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். மோடிக்கு முன்பு 2009 ஆம் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.