இந்தியா

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி: மீண்டும் ஒலிபரப்பு

உலகத்தின் உன்னதமான உறவு எது என்று என்னைக் கேட்டால் நான் அம்மாவைச் சொல்வேன். நம் வாழ்க்கையில் அம்மாவின் நிலை மிகவும் உயர்வானது.

ராம் அப்பண்ணசாமி

மூன்று மாதங்கள் கழித்து பிரதமர் மோடியின் `மனதின் குரல்’ நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட `அன்னைக்காக ஒரு மரம்’ குறித்துப் பேசினார் மோடி.

2014-ல் முதல்முறையாக பிரதமராகப் பதவியேற்றவுடன் மாதம் ஒரு முறை `மனதின் குரல்’ என்ற பெயரில் வானொலியில் மக்களிடம் உரையாடத் தொடங்கினார் மோடி. 18-வது மக்களவைத் தேர்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் மனதின் குரல் நிகழ்ச்சியில் 110-வது முறையாகப் பேசினார் மோடி. மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றதும் இன்று 111-வது முறையாக மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

`உலகத்தின் உன்னதமான உறவு எது என்று என்னைக் கேட்டால் நான் அம்மாவைச் சொல்வேன். நம் வாழ்க்கையில் அம்மாவின் நிலை மிகவும் உயர்வானது. எத்தனை துன்பங்கள் வந்தாலும் அவற்றைக் கடந்து தன் குழந்தையை அவர் வளர்ப்பார். அம்மாவின் இந்த அன்புக்கு நாம் திருப்பி எதுவும் செலுத்த முடியாது. ஆனால் வேறு ஒன்றைச் செய்ய முடியும். இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தில், ` அன்னைக்காக ஒரு மரம்’ என்ற பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு என் அம்மாவின் பெயரில் நான் ஒரு மரத்தை நட்டேன். நம் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் அம்மாவுக்காக ஒரு மரக்கன்றை நட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறேன்’ என்று பேசினார் மோடி.

மேலும் இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் கேரளாவில் தயாரிக்கப்படும் `கருத்தும்பி குடை’ குறித்துப் பேசினார் மோடி. இந்தக் குடை அட்டப்பாடி பகுதியில் வசிக்கும் பழங்குடியினப் பெண்களால் தயாரிக்கப்படுகிறது. இந்தக் குடைகளைத் தயாரிப்பதன் மூலம் அவர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் அவர்கள் உலகுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள் எனத் தன் பேச்சில் குறிப்பிட்டார் மோடி.

ஆந்திராவின் அரக்கு பகுதியில் விளைவிக்கப்படும் காபி, ஜம்மு-காஷ்மீரில் விளையும் பட்டாணி போன்றவை குறித்தும், அவை அந்த மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் விளைவு குறித்தும் பேசினார் மோடி.

`இந்த மாதம் 10-வது யோகா தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த யோகா தினக் கொண்டாட்டத்தில் நான் கலந்து கொண்டேன். காஷ்மீரின் இளைஞர்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் யோகா தினக் கொண்டாட்டத்தில் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்’ என்று யோகா தினம் குறித்துப் பேசினார் மோடி.

ஜார்க்கண்டின் சந்தால் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான சித்து, கன்ஹூ ஆகியோரின் வீரம் குறித்தும். அவர்களை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் `ஹூல் திவாஸ்’ குறித்து தன் பேச்சில் குறிப்பிட்டார் மோடி.