பிரதமராக வடகிழக்கு மாநிலங்களுக்கு 70 முறை வந்ததாகவும், பாஜக அமைச்சர்கள் 800 முறைக்கு மேல் வந்துள்ளார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
அருணாசல பிரதேசத்தின் இடாநகரில் ரூ. 5,100 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் பேசிய அவர்,
“பண்டிகைக் காலத்தில் நாட்டில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் இன்று (செப்.22) அமலுக்கு வந்திருப்பது மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி
பொதுவாக, சூரியனின் முதல் கதிர்கள் அருணாச்சல் பிரதேசத்தில் விழுகின்றன, ஆனால் முன்னேற்றத்தின் கதிர்கள் இங்கு விழுவதற்கு பல ஆண்டுகள் கடந்துவிட்டன. நான் 2014-க்கு முன்பும் இங்கு வந்திருக்கிறேன். அருணாச்சல் பிரதேசம் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்டது. ஆனால், அப்போதைய டெல்லி அரசு, அருணாச்சல் பிரதேசத்தையும் அதன் மக்களையும் புறக்கணித்தது. குறைவான மக்கள் தொகையையும், 2 மக்களவை இடங்களை மட்டுமே கொண்ட அருணாசல பிரதேசத்திற்கு ஏன் கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் போன்ற கட்சிகள் நினைத்தன. முழு வடகிழக்கு மாநிலங்களும் முன்னேற்றத்தில் பின்தங்கியிருந்தன.
ஆனால் பாஜக வடகிழக்கு மாநிலங்களின் மீது கவனம் செலுத்துகிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது, அமைச்சர்கள் வட மாநிலங்களுக்கு 2-3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே சென்று வந்தார்கள். ஆனால் பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு 800 முறைக்கு மேல் பயணம் செய்துள்ளார்கள். பாஜக அமைச்சர்களின் பயணங்களில், தொலைதூர மாவட்டங்கள் மற்றும் கிராமங்களுக்கு செல்ல முயல்கிறார்கள். பிரதமராக நான் வடகிழக்கு மாநிலங்களுக்கு 70 முறைக்கு மேல் வந்திருக்கிறேன்.
வடகிழக்கு எனக்கு மனதுக்கு மிகவும் பிடித்தமானது, அதனால்தான் நாங்கள் மனதின் தூரத்தை நீக்கி, டெல்லியை உங்களுக்கு அருகில் கொண்டு வந்திருக்கிறோம். அதிக வாக்குகளையோ இடங்களையோ பெறுவது எங்கள் உத்வேகம் அல்ல. தேசம் முதலில் என நினைப்பதுதான் எங்கள் உத்வேகம். மக்களே தெய்வம் என்பது தான் எங்கள் தாரக மந்திரம்”
இவ்வாறு கூறினார். முன்னதாக அருணாசல பிரதேசத்தில் சாலை மார்க்கமாக பயணித்த பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.