பிரதமர் மோடி @news18
இந்தியா

ஹிந்து - முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்தமாட்டேன்: பிரதமர் மோடி

யோகேஷ் குமார்

ஹிந்து, முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்தினால் நான் பொதுவாழ்வுக்குத் தகுதியற்றவனாக இருப்பேன் என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை பிரதமர் நேற்று தாக்கல் செய்தார்.

இந்நிலையில் அவர் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் ஹிந்து - முஸ்லிம் குறித்து மோடி பேசியதாவது:

“ஹிந்து, முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்தினால் நான் பொதுவாழ்வுக்குத் தகுதியற்றவனாக இருப்பேன்.

எனவே, ஒருபோதும் ஹிந்து - முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்தமாட்டேன். நான் அனைவரையும் சமமாகப் பார்க்கிறேன்.

சிறுவயதில் முஸ்லிம் குடும்பத்தில் வாழ்ந்தேன். எனது நண்பர்கள் பலரும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஏதேனும் விஷேச நாள்களில் முஸ்லிம் குடும்பங்களில் இருந்து எங்கள் வீட்டிற்கு உணவு வரும்.

அதிகமான குழந்தைகளைப் பற்றி பேசினால், ஏன் முஸ்லிம்களைப் பற்றி பேசுவதாக மக்கள் கருதுகிறார்கள் எனத் தெரியவில்லை. ஏழை ஹிந்துக் குடும்பங்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது. அவர்களால் தங்களின் குழந்தைகளுக்கு சரியான கல்வியை கொடுக்க முடியவில்லை. முஸ்லிம்களும் எனக்கு வாக்களிப்பார்கள்” என்றார்.