ANI
இந்தியா

ஆகஸ்டில் மோடி ஆட்சி கவிழும்: லாலு பிரசாத் யாதவ்

ராம் அப்பண்ணசாமி

கட்சித் தொண்டர்கள் அனைவரும் தயாராக இருங்கள், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடைபெறலாம் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பேசியுள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் 28வது தொடக்க விழா நேற்று பாட்னாவில் நடைபெற்றது. இந்த விழாவில் தலைமையேற்றுப் பேசினார் அக்கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ். அவரது உரையின் சுருக்கம்:

` கடந்த 27 வருடங்களாக பல ஏற்ற இறக்கங்களைப் பார்த்துள்ளோம். அதனால் வலுவடைந்துள்ளோம். கட்சித் தொண்டர்கள் அனைவரும் தயாராக இருங்கள், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடைபெறலாம். டெல்லியில் உள்ள மோடி அரசு மிகவும் பலவீனமாக உள்ளது. ஆகஸ்டில் ஆட்சி கவிழும், அதைத் தொடர்ந்து இண்டியா கூட்டணியின் ஆட்சி நாட்டில் மலரும்.

பீகாரில், ராஷ்டிரிய ஜனதா தளம் தேஜ்ஸ்வி யாதவ் தலைமையில் தேர்தலைச் சந்திக்கும். நான் அவரிடம் பொறுப்பைக் கொடுத்துள்ளேன். உங்கள் ஆதரவை அவருக்கு அளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ராஷ்டிரிய ஜனதா தளம் இன்னும் பல உயரங்களுக்குச் செல்லும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

குற்றச் செயல்கள் பீஹாரில் அதிகரித்துள்ளன. மத்திய மற்றும் மாநிலத்தில் இருக்கும் இரட்டை என்ஜின் ஆட்சிகளில், ஒரு என்ஜின் ஊழலிலும், மற்ற என்ஜின் குற்றச் செயல்களிலும் ஈடுபடுகிறது. வேலைவாய்ப்பின்மை, வறுமை, பணவீக்கம் போன்றவற்றை யார் உயர்த்தினார்களோ, யாருடைய ஆட்சிக்காலத்தில் பாலங்கள் இடிந்துவிழுந்ததோ அவர்களை மீண்டும் அதிகாரத்துக்கு வர விடமாட்டோம்.

2024 அல்லது 2025-ல் நிதீஷ் குமார் தேர்தலை நடத்துவார். மீண்டும் ராஷ்டிரிய ஜனதா தளத்தை அதிகாரத்துக்குக் கொண்டு வர சில கடினமான முடிவுகள் எடுக்க வேண்டியதுள்ளது. அதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஆனால் மகாகத்பந்தன் கூட்டணி அரசு பீகாரில் ஆட்சியமைக்கும்’.