ANI
இந்தியா

மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக மோடி அரசு இருக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

ராம் அப்பண்ணசாமி

ஜூன் 23-ல் நடக்கவிருந்த நீட் முதுநிலைத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது. இந்த முடிவுக்குத் தன் எக்ஸ் கணக்கில் கண்டனப் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.

`இப்போது நீட் முதுநிலைத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் நமது கல்வித்துறை எவ்வளவு தூரம் சீரழிந்துள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. பாஜக ஆளும் மாநிலங்களில் மாணவர்கள் அவர்களின் வேலை வாய்ப்புகளுக்காக மட்டுமல்லாமல், அவர்களின் வருங்காலத்தைக் காப்பதற்காகவும் அரசாங்கத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ எனத் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.

மேலும், `நடப்பதை எப்போதும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் மோடி, வினாத்தாள் மோசடி மற்றும் கல்வித்துறை மாஃபியாவுக்கு முன்னால் செயலற்று இருக்கிறார். மாணவர்களின் எதிர்காலத்துக்கான மிகப்பெரும் அச்சுறுத்தலாக நரேந்திர மோடியின் திறமையற்ற அரசு இருக்கிறது. நாட்டின் வருங்காலத்தை நாம் (மத்திய) அரசிடமிருந்து காப்பாற்ற வேண்டும்’ என மத்திய அரசுக்குத் தன் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, `மாணவர்களுக்குத் தகுந்த நீதி கிடைக்க மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும். இப்போது நீட் முதுநிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக 4 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்டுள்ளன. வினாத்தாள் கசிவு, ஊழல், முறைகேடுகள், கல்வி மாஃபியா போன்றவை நம் கல்வித்துறையில் ஊடுருவியுள்ளன. இந்த வெள்ளையடிப்பு நடவடிக்கையால் எந்தப் பலனும் இல்லை எண்ணற்ற மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்’ எனத் தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

மருத்துவ இளநிலை படிப்புகளுக்காக நீட் நுழைவுத்தேர்வில் நடந்த மோசடிகள் காரணமாக, மருத்துவ நுழைவுத் தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வு முகமை அமைப்பு கடந்த சில நாட்களாகக் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகிவருகிறது. அதன் தலைவராகப் பொறுப்பு வகித்த சுபோத் குமார் சிங் நீக்கப்பட்டு, கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, NEET மற்றும் NET நுழைவுத்தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்கவும், நியாயமான முறையில் தேர்வுகளை நடத்தவும் அரசுக்கு ஆலோசனை கூற முன்னாள் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.