உலகம் முழுக்க இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கடந்த ஓரிரு நாள்களாகவே மக்கள் கொண்டாட்ட மனநிலையை அடைந்து கிறிஸ்துமஸை வெவ்வேறு வகையில் கொண்டாடி வருகிறார்கள்.
ஆனால் சில வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த சமூக விரோதக் கும்பல்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில், ஆங்காங்கே தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.
அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்குத் தேவையானப் பொருள்களை அடித்து நொறுக்கி தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறார்கள்.
காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் செயின்ட் மேரிஸ் பள்ளிக்குச் சென்று, கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்துக்கு தயாராக இருந்த ஏற்பாடுகள் அனைத்தையும் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். பேனர்களையும் போஸ்டர்களையும் எரித்துள்ளார்கள். ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்தை எழுப்பியுள்ளார்கள். பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நடத்தக் கூடாது என மிரட்டியுள்ளார்கள்.
பிறகு, நல்பாரி நகரில் பல்வேறு கடைகளுக்குச் சென்று கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பொருள்களைத் தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறார்கள்" என்று காவல் அதிகாரி கூறியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை யாரும் புகாரளிக்காததால், வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங் தள அமைப்பின் மாவட்டச் செயலாளர் பாஸ்கர் தேகா செய்தியாளர்களிடம் கூறும்போது, "எங்களுக்கு இங்கு கிறிஸ்துவப் பண்டிகைகள் தேவையில்லை" என்று சொல்லியிருக்கிறார்.
கேரள மாநிலம் பாலக்காட்டிலும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. குழந்தைகளை அச்சுறுத்தி, தாக்கி, அவர்களுடைய இசைக் கருவிகளைச் சேதப்படுத்திய புகார் தொடர்பாக ஆர்எஸ்எஸ் நிர்வாகி அஸ்வின் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டங்களைக் கொண்டாடக் கூடாது என பள்ளி நிர்வாகங்களை வலதுசாரி அமைப்பினர் மிரட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது என கேரள அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
மத்தியப் பிரதேச மாவட்டம் ஜபல்பூரில் மட்டும் கிறிஸ்துவ வழிபாட்டுக் கூட்டங்களில் இரு தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியதாக ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன. காணொளிகளும் சமூக ஊடகங்களில் கசிந்து வருகின்றன.
சத்தீஸ்கரில் ராய்பூரிலுள்ள வணிக வளாகங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைக் குறிவைத்து வலதுசாரிக் கும்பல்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். வணிக வளாகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சார்ந்த பொருள்களை அடித்து நொறுக்கியுள்ளார்கள்.
இந்நிலையில் தான் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலினும் இதுபோன்ற சம்பவத்தைக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது!
பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.
மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது. எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்!" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Christmas | Christmas Celebration | MK Stalin | Right Wing Outfit | VHPBD | Vishwa Hindu Parishad Bajran Dal |