இந்தியா

முழு எழுத்தறிவு பெற்ற நாட்டின் முதல் மாநிலம் மிசோரம்: முதல்வர் லால்டுஹோமா அறிவிப்பு

இது மிசோரமுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் நாள்.

ராம் அப்பண்ணசாமி

நாட்டில் முழு எழுத்தறிவு பெற்ற முதல் மாநிலம் என்ற பெருமையை மிசோரம் அடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் லால்டுஹோமா அறிவித்துள்ளார்.

மிசோரம் பல்கலைக்கழகத்தில் நேற்று (மே 20) நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் லால்டுஹோமா, நாட்டில் முழு எழுத்தறிவு பெற்ற முதல் மாநிலம் என்ற பெருமையை மிசோரம் அடைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

பள்ளிப் படிப்பை தவறவிட்ட வயது வந்தோருக்குக் கல்வி அளிக்கும் `உல்லாஸ் (ULLAS)’ எனப்படும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் உதவியுடன் இந்த இலக்கை மிசோரம் எட்டியுள்ளது.

இந்த நிகழ்வில் முதல்வர் லால்டுஹோமா பேசியதாவது, `நமது மாநிலத்தின் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை இன்றைய நாள் குறிக்கிறது - வரும் தலைமுறையினரால் இது நினைவுகூரப்படும். முந்தைய கல்வி வாய்ப்புகளைத் தவறவிட்ட போதிலும், அசாதாரணமான உறுதியையும், வாழ்க்கையின் பிற்பகுதியில் கூட கற்றுக்கொள்ளும் விருப்பத்தை மொத்தம் 1,692 பேர் வெளிப்படுத்தினார்கள்’ என்றார்.

கல்வி மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வித்திட்ட மிசோரமின் உறுதிப்பாட்டை இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய கல்வி இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி பாராட்டினார். மேலும், `இது மிசோரமுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் நாள்’ என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட்-செப்டம்பர் 2023-ல் மாநிலம் முழுவதும் வீடு வீடாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் மொத்தமாக எழுத்தறிவு இல்லாத 3,026 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 1,692 பேர் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள்.

95 சதவீதத்திற்கு மேல் ஒரு மாநிலம் எழுத்தறிவு பெற்றிருந்தால், அம்மாநிலம் முழு எழுத்தறிவு பெற்றதற்கு சமமாகக் கருதப்படும் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் வரையறுத்துள்ளது. அந்த வகையில், இதன் மூலம் முழு எழுத்தறிவை மிசோரம் எட்டியுள்ளது.

2011 மக்கள்தொகை கணக்கீட்டின்படி, 91.33 % எழுத்தறிவைக் கொண்ட மாநிலமாக மிசோரம் இருந்தது. 2023-34 குறிப்பிட்ட கால தொழிலாளர் கணக்கெடுப்பின்படி (PLFS), மிசோரம் மாநிலத்தின் எழுத்தறிவு 98.2 % ஆக உயர்ந்தது.