இந்தியா

கல்வித்துறை அலுவலர்கள் ஸோஹோவைப் பயன்படுத்த வேண்டும்: மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு | Zoho |

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளைப் பயன்படுத்த அறிவிப்பு...

கிழக்கு நியூஸ்

சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து கல்வித்துறை அலுவலர்களும் இனி ஸோஹோ ஆஃபீஸ் சூட் மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சுயசார்பு இந்தியா கொள்கையின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு நடவடிக்கையாக மத்திய கல்வித்துறையில் இனி அனைத்து ஆவணங்களும் இந்திய தயாரிப்பான ஸோஹோவின் அலுவல் தொகுப்பான ஸோஹோ ஆஃபீஸ் சூட்-ஐ பயன்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

”நாட்டின் தொழில்நுட்ப இறையாண்மையை வலுப்படுத்தும் வகையில் சுயசார்பு இந்தியா கொள்கைக்காக சுதேசி இயக்கத்தின் அடிப்படையில் ஸோஹோ ஆஃபீஸ் சூட் மென்பொருளை ஏற்றுக் கொள்வது தொடர்பான அறிக்கை.

சேவை பொருளாதாரமாக உள்ள இந்தியாவை, தயாரிப்பு சார்ந்ததாக மாற்றும் அரசின் விரிவான கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக, சுய சார்புள்ள தொழில்நுட்பம், மென்பொருள் மற்றும் வன்பொருள்களின் சுற்றுச் சூழலை அமைக்கும் நடவடிக்கையாக, அனைத்து அலுவலர்களுகும் இனி ஸோஹோ ஆஃபீஸ் சூட் மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இனி அனைத்து விதமான அலுவல் ரீதியான ஆவணங்கள், கோப்புகள், விளக்கக் காட்சிகள் ஆகியவை ஸோஹோ ஆஃபீஸ் சூட் மூலம் மட்டுமே உருவாக்கப்பட வேண்டும்.

ஸொஹோவின் உள்நாட்டு அலுவலக உற்பத்தித்திறன் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், சுதேசி இயக்கத்தில் ஒரு துணிச்சலான படியை எடுத்து வைக்கிறோம். இந்தியா உள்நாட்டு கண்டுபிடிப்புகளுடன் வழிநடத்தவும், தொழில்நுட்ப இறையாண்மையை வலுப்படுத்தவும், சுயசார்பு எதிர்காலத்திற்காக நமது தரவைப் பாதுகாக்கவும் முடியும்.

இதன் அடிப்படையில் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.

1) அலுவலர்கள் தங்கள் தேசிய தகவலியல் மைய மின்னஞ்சல்களைக் கொண்டே ஸொஹோ ஆஃபீஸ் சூட் கருவிகளை இயக்கிக் கொள்ளலாம்.

2) அனைத்து அலுவல் ரீதியான கோப்புகள், ஆவணங்கள் மற்றும் விளக்கக் காட்சிகள் இனி ஸோஹோ ஆஃபீஸ் சூட் மூலம் மட்டுமே உருவாக்கப்படவும், திருத்தப்படவும் பகிரப்படவும் வேண்டும்.

3) அலுவலர்கள் இதன் நுணுக்கங்களில் தேர்ச்சி பெற்று, இந்த மென்பொருளின் செயலாக்கத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்த தயாராக வேண்டும்.

4) ஸோஹோ ஆஃபீஸ் சூட் குறித்த சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கு தேசிய தகவலியல் மையத்தின் உதவிகளைப் பெறலாம்.

5) மத்திய கல்வி அமைச்சகத்தின் அனைத்து அலுவலர்களும் ஊழியர்களும் இந்த உத்தரவை உடனே நடைமுறைக்குக் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும்.”

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.