நாட்டின் முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள, பயிற்சி மையங்களை மாணவர்கள் அதிகம் சார்ந்து இருப்பது குறித்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்க, 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.
முறையான இடைவெளிகளைக் கண்டறிந்து, மாணவர்கள் தனியார் பயிற்சிகளை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் உரிய பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்குவது இந்த நிபுணர் குழுவின் பணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மிக முக்கியமாக, நாட்டின் கல்விச் சூழலை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இது பார்க்கப்படுகிறது.
மத்திய உயர் கல்வித்துறை செயலர் வினீத் ஜோஷி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிபுணர் குழுவில், சிபிஎஸ்இ தலைவர், மத்திய பள்ளிக் கல்வித்துறை இணை செயலர், ஐஐடி மெட்ராஸ் பிரதிநிதி, என்ஐடி திருச்சி பிரதிநிதி, ஐஐடி கான்பூர் பிரதிநிதி, என்சிஇஆர்டி பிரதிநிதி, மத்திய உயர் கல்வித்துறை இணை செயலர் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
பின்வரும் பத்திகள் தொடர்பான விரிவான மதிப்பாய்வை நிபுணர் குழு மேற்கொள்ளும்:
எதனால் மாணவர்கள் தனியாரிடம் பயிற்சியைப் பெற நேரிடுகிறது என்ற கேள்வியை முன்வைத்து, தற்போதைய பள்ளிக் கல்வி முறையில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிதல்.
தரமான உயர்கல்விக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள குறைவான இடங்களால் ஏற்படும் சவால்களை பகுப்பாய்வு செய்தல்.
பயிற்சி மையங்களின் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர நடைமுறைகளை மதிப்பாய்வு செய்தல்.
நுழைவுத் தேர்வுகளில் உள்ள நியாயத்தன்மை மற்றும் அவற்றின் செயல்திறன் குறித்து ஆய்வு செய்தல்.
பாரம்பரிய விருப்பங்களுக்கு அப்பாற்பட்ட பல்வேறு (உயர் கல்வி, எதிர்கால பணி தொடர்பான) பாதைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே உள்ள விழிப்புணர்வை மதிப்பிடுதல்.