இந்தியா

சிவசேனையில் இணைந்த மிலிந்த் தியோரா

கிழக்கு நியூஸ்

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனையில் இணைந்தார்.

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் முரளி தியோராவின் மகன் மிலிந்த் தியோரா. இவர் கட்சியின் முதன்மை உறுப்பினர் பொறுப்பை ராஜிநாமா செய்வதாக எக்ஸ் தளத்தில் இன்று அறிவித்தார்.

காங்கிரஸிலிருந்து விலகியதன் மூலம் கட்சியுடனான 55 ஆண்டுகால குடும்ப உறவை இவர் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார். இவர் 2012 முதல் 2014 வரை மத்திய இணை அமைச்சராக இருந்துள்ளார். மும்பை காங்கிரஸின் தலைவராகவும் இருந்துள்ளார்.

கட்சியிலிருந்து விலகிய பிறகு, வளர்ச்சிப் பாதையில் செல்வதாகக் கூறினார். இவரது ராஜிநாமா குறித்து பேசிய மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மிலிந்த் தியோரா சிவசேனைக்கு வந்தால் வரவேற்கப்படுவார் என்று அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, மும்பையிலுள்ள ஏக்நாத் ஷிண்டேவின் அலுவல் இல்லத்துக்குச் சென்றார். அவரது முன்னிலையில் மிலிந்த் தியோரா தன்னை சிவசேனையில் இணைத்துக்கொண்டார்.

ராகுல் காந்திக்கு நெருங்கியவராக அறியப்படும் மிலிந்த் தியோரா, ராகுல் காந்தி மணிப்பூரில் நடைபயணத்தைத் தொடங்கியுள்ள இதே நாளில் கட்சியிலிருந்து விலகி சிவசேனையில் இணைந்துள்ளார்.