இந்தியா

நான் பேசிக் கொண்டிருந்தபோதே மைக் அணைக்கப்பட்டது: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு

ராம் அப்பண்ணசாமி

பிரதமர் மோடி தலைமையில் தில்லியில் நடக்கும் 9-வது நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, கூட்டத்தின் இடையே வெளிநடப்பு செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மமதா, 5 நிமிடங்கள் மட்டுமே தனக்குப் பேச வாய்ப்பு வழங்கப்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.

`நீங்கள் (மத்திய அரசு) மாநிலங்களுக்கு இடையே பாகுபாடு காட்டக்கூடாது என்று நான் பேசினேன். தொடர்ந்து நான் பேசிக் கொண்டிருந்தபோது என் மைக் அணைக்கப்பட்டது. 5 நிமிடங்கள் மட்டுமே எனக்குப் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனக்கு முன்பு பேசியவர்களுக்கு 10-20 நிமிடங்கள் பேச வாய்ப்பளிக்கப்பட்டது’ என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் மமதா.

மேலும் `எதிர்க்கட்சிகளின் வரிசையிலிருந்து நான் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். இருந்தும் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது அவமானப்படுத்தும் செயல்’ என்றார் மமதா.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன்பு, `நிதி ஆயோக்கைக் கலைக்க வேண்டும். இந்த அமைப்பு கூட்டம் நடத்துவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. திட்ட கமிஷனைத் திரும்பக் கொண்டுவர வேண்டும். ஒருங்கிணைப்புதான் இங்கே பிரச்சனை. கூட்டாட்சித் தத்துவத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் பாஜக நாட்டை உடைக்கப்பார்க்கிறது. அதன் தலைவர்கள் உடைப்பது குறித்துப் பேசுகிறார்கள்’ என்று மமதா குற்றம்சாட்டினார்.

`மேற்கு வங்க மாநிலத்தின் வடக்குப் பகுதி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை ஒத்து இருப்பதால், அதை வட கிழக்கு மேம்பாடு அமைச்சகத்தின் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்’ என்று கடந்த ஜூலை 24-ல் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சுகாந்தா மஜும்தார் பேசியிருந்தார்.