மேகாலயாவில் கொலை செய்யப்பட்ட ராஜா ரகுவன்ஷியின் தாயாரான உமா ரகுவன்ஷி, தனது மகனின் மரணத்திற்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்பவருக்கு சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மே 11 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு புதுமணத் தம்பதிகள் தேனிலவு கொண்டாட மேகாலயா மாநிலத்திற்குச் சென்று அங்குள்ள நோன்கிரியாட் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.
மே 23 அன்று காலை 6 மணிக்கு விடுதியில் இருந்து வெளியேறிய தம்பதிகளை அவர்களது குடும்பத்தினரால் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்நிலையில், சோஹ்ரா பகுதியில் இருக்கும் வெய் சாவ்டோங் அருவிக்கரையை ஒட்டி அமைந்திருந்த பள்ளத்தில் இருந்து கடந்த ஜூன் 2 அன்று ரகுவன்ஷியின் உடல் மீட்கப்பட்டது.
முகம் சிதைந்த நிலையில் இருந்தாலும், கையில் ராஜா என்று பச்சை குத்தியிருந்ததை வைத்து அது ராஜாவின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. ஆனால் அவரது மனைவி சோனத்தை காணவில்லை என்பதால், தொடர்ந்து அவரை தேடும் பணி நடைபெற்றது.
ராஜாவை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற தடயங்களை வைத்து காவல்துறையினரின் சந்தேகப் பார்வை சோனத்தின் மீது சென்றது. சோனத்தின் தொலைபேசி உரையாடல்களை குறித்த தகவல்களை எடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், உ.பி. மாநிலம் காஸிப்பூர் மாவட்டத்தின் நந்த்கஞ்ச் காவல்நிலையத்தில் சோனம் சரணடைந்தார்.
காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் பிறரது உதவியுடன் தன் கணவர் ராஜாவை மேகாலயாவில் வைத்து திட்டமிட்டு சோனம் படுகொலை செய்தது காவல்துறை விசாரணையில், தெரியவந்தது. இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் மீது எந்தவொரு குற்றப்பதிவுகளும் இல்லை என்றும் மத்திய பிரதேச காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, கொலை செய்யப்பட்ட ராஜா ரகுவன்ஷியின் தாயாரான உமா ரகுவன்ஷி, ஏ.என்.ஐ. ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
`எனது மகனுக்கு நீதி தேவை. குற்றம்சாட்டவர்களை தூக்கில் போடவேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படவேண்டும். இதில் நிறைய பேர் சம்மந்தப்பட்டிருக்கவேண்டும், ஒருவரால் மட்டும் இத்தகைய திட்டத்தை தீட்டி அதை நிறைவேற்றியிருக்க முடியாது.
அவரை (சோனம்) எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். அவரது கடந்த காலம் குறித்து நாங்கள் கருத்தில்கொள்ளவில்லை; எதிர்காலம் குறித்தே யோசித்தோம். இந்த திருமணத்தால் ராஜா மகிழ்ச்சியாகவே இருந்தான். கடைசியாக மே 23 அன்று அவர்களுடன் (தொலைபேசியில்) உரையாடினேன். இறுதிவரை எனக்கு சந்தேகம் வரவில்லை’ என்றார்.