சோனம் ANI
இந்தியா

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: 4வது முயற்சியில் கொல்லப்பட்ட ராஜா ரகுவன்ஷி!

அவரை நோன்கிரியாட்டில் கொல்ல அவர்கள் விரும்பினார்கள், ஆனால் உடலை அப்புறப்படுத்த அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.

ராம் அப்பண்ணசாமி

மேகாலயாவில் தேனிலவுக்குச் சென்றபோது கணவர் ராஜா ரகுவன்ஷியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது மனைவி சோனம், ஒட்டுமொத்தமாக 4 முறை கொலை முயற்சியில் ஈடுபட்டதாக மேகாலயா காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்பவருக்கு சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மே 11 அன்று திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதிகளில் தேனிலவு கொண்டாட அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தி வழியாக மேகலாயாவிற்குச் சென்றுள்ளனர்.

காதலர் ராஜா குஷ்வஹா மற்றும் மூவரின் உதவியுடன் தன் கணவரை மேகாலயாவில் வைத்து சோனம் கொலை செய்துள்ளார். தற்போது சோனமும், அவரது காதலரும் மேகாலயா காவல்துறையின் பிடியில் உள்ளனர்.

இந்நிலையில், `ராஜா ரகுவன்ஷி நான்காவது முயற்சியில் கொல்லப்பட்டார்’, என்று காவல்துறை கண்காணிப்பாளர் விவேக் சையம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவரை கொல்வதற்கான முதல் முயற்சி கௌஹாத்தியில் மேற்கொள்ளப்பட்டது, அதைத் தொடர்ந்து மேகாலயாவின் சோஹ்ராவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு முயற்சிகள் தோல்வியுற்றதாகவும், இறுதியில் ராஜாவை வெய்சாவ்டோங் நீர்வீழ்ச்சி பகுதியில் வைத்து அவர்கள் கொன்றதாக சையம் கூறினார்.

கண்காணிப்பாளர் சையம் கூறியதாவது, `பல்வேறு இடங்களில் அவரை கொல்வதற்கான முயற்சி நடந்துள்ளது. ராஜாவின் உடலை கௌஹாத்தியின் எங்காவது அப்புறப்படுத்தவும் அவர்கள் விரும்பினார்கள், ஆனால் அது நடக்கவில்லை. அவரை நோன்கிரியாட்டில் கொல்ல அவர்கள் விரும்பினார்கள், ஆனால் உடலை அப்புறப்படுத்த அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.

மாவ்லாகியத் மற்றும் வெய்சாவ்தோங்கிற்கு இடையே ராஜா கழிப்பறைக்குச் சென்றபோது கொலை செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. இறுதியாக வெய்சாவ்டோங்கில் அதை நிறைவேற்றினார்கள்’ என்றார்.