வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் சட்ட ஒழுங்கை மீட்டெடுக்கும் நோக்கில், ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினரால் ஒருங்கிணைந்த முறையில் நடத்தப்பட்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் முடிவில், ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் இன்று (ஜூலை 26) மீட்கப்பட்டன.
தலைநகர் இம்பாலில் உள்ள அம்மாநில காவல்துறை தலைமையகத்தில் ஊடகங்களிடம் பேசிய காவல்துறை ஐஜி (மண்டலம்-II) கே. கபீப், உளவுத்துறையிடம் இருந்து கிடைக்கப்பெற்ற குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் ஜூலை 26 அதிகாலையில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாகத் தகவல் தெரிவித்தார்.
மணிப்பூர் மாநில காவல்துறை, மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை, இந்திய ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் ஆகியவற்றை சேர்ந்த படையினர் கூட்டாக இணைந்து இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபல், காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களில் தேடுதல் முயற்சியை மேற்கொண்டனர்
தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 90 ஆயுதங்கள் மற்றும் 728 ரவுண்ட் தோட்டாக்கள் மீட்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் மூன்று ஏ.கே. ரக துப்பாக்கிகள், ஒரு எம்.16 துப்பாக்கி, ஒரு இன்சாஸ் ரக இயந்திர துப்பாக்கி, ஐந்து இன்சாஸ் ரைபிள்கள், நான்கு இயந்திர துப்பாக்கிகள், .303 காலிபர் கொண்ட நான்கு துப்பாக்கிகள் மற்றும் ஏழு பிஸ்டல்கள், ஆகியவை அடங்கும்.
கூடுதலாக 21 கையெறி குண்டுகள், பீரங்கி மூலம் ஏவப்படும் ஒரு வகையான மோட்டார் வெடிகுண்டு, 9 தோல்பட்டை ஏவுகணைகள் மற்றும் 6 மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் (IED) ஆகியவற்றையும் பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.
இந்த நடவடிக்கையை மிகப்பெரிய சாதனையாக வர்ணித்த மணிப்பூர் காவல்துறை, இதன் மூலம் சட்ட ஒழுங்கைப் பேணுவதற்கும் குடிமக்களின் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்குமான அதன் நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்தது.
மேலும், பாதுகாப்பு அமைப்புகளுக்குப் போதிய ஒத்துழைப்பை வழங்குமாறும், சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பான சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் அல்லது தகவல்கள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அது குறித்துப் புகாரளிக்குமாறும், பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.