ANI
இந்தியா

எப்போதுமே பொறுப்புடனே நடந்துகொள்கிறோம்: அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் பதில்!

எதிர்காலத்தில் பதற்றத்தைத் தவிர்ப்பதற்கான பேச்சுவார்த்தையை எளிதாக்குவதற்காக, அமெரிக்கா உதவி செய்யும்.

ராம் அப்பண்ணசாமி

எப்போதும் இந்தியா பொறுப்புடனே நடந்துகொள்வதாகவும்; இனியும் அவ்வாறே நடந்துகொள்ளும் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் தொலைபேசி வாயிலாக உரையாடியதாகவும், இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தைத் தணித்து நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசவேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனான அழைப்பைத் தொடர்ந்து, தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், `இன்று காலை மார்கோ ரூபியோவுடன் உரையாடினேன். இந்தியாவின் அணுகுமுறை எப்போதுமே அளவிடப்பட்ட முறையில், பொறுப்புமிக்கதாகவே இருந்துள்ளது; இனியும் அப்படியே தொடரும்’ என்றார்.

எதிர்காலத்தில் பதற்றத்தைத் தவிர்ப்பதற்கான பேச்சுவார்த்தையை எளிதாக்குவதற்காக, அமெரிக்கா உதவி செய்யும் என வெளியுறவு அமைச்சர் ரூபியோ பேசியதாக, அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் தகவல் தெரிவித்தார்.

முன்னதாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருடன் பேசிய ரூபியோ, ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பதற்றத்தை தணிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். பதற்றத்தை தணிப்பதற்காக அரசுகளுக்கு இடையிலான ராஜதந்திர நடவடிக்கைகள் சுறுசுறுப்பாக மேற்கொள்ளப்பட்டாலும், களத்தில் இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.