ANI
இந்தியா

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பையில் கடும் போக்குவரத்து நெரிசல்! | Maratha Reservation | Mumbai

மராத்தா சமூகத்தை அழிக்க விரும்புகிறார்கள். எங்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க அவர்கள் விரும்பவில்லை.

ராம் அப்பண்ணசாமி

மஹாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மராத்தா இடஒதுக்கீட்டு போராட்டங்கள் இன்றும் (ஆக. 30) நடைபெற்றதால், மும்பை மாநகரின் சில இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு சலுகைகளைப் பெறும் வகையில் அனைத்து மராத்தா பிரிவினரையும் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவில் சேர்க்கக் கோரி, மனோஜ் ஜரங்கே பாட்டீல் மும்பையின் ஆசாத் மைதானத்தில் நேற்று (ஆக. 29) உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

கூடுதலாக ஒரு நாள் போராட்டத்தைத் தொடர ஜரங்கேவுக்கு மும்பை காவல்துறை அனுமதி அளித்துள்ள நிலையில், `நீங்கள் அனுமதி அளித்தாலும் இல்லாவிட்டாலும் போராட்டங்கள் நடைபெறும்’ என்று அவர் கூறியதாக ஏஎன்ஐ ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

`போராட்டத்தைக் கலைப்பதும், அனுமதி வழங்குவதும் அரசாங்கத்தின் கைகளில் உள்ளது’ என்றும் அவர் கூறினார்.

மேலும், `அரசாங்கத்துடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்துவது எங்கள் வேலை அல்ல. அவர்கள் மராத்தா சமூகத்தை அழிக்க விரும்புகிறார்கள். எங்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க அவர்கள் விரும்பவில்லை. அரசாங்கம் மராத்தா சமூகத்தை அழிக்க விரும்புகிறது. ஒரு நாள் அனுமதி வழங்க முடியும் என்றபோது, அவர்கள் நிரந்தரமாக அனுமதியை வழங்கலாம்’ என்றார்.

இந்நிலையில், 2-வது நாளாக தொடர்ச்சியாக இன்று (ஆக. 30) மும்பை மாநகரின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) ரயில் நிலையத்திற்கு வெளியிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் நடைபெற்றதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போராட்டக்காரர்களை சாலைகளில் இருந்து அப்புறப்படுத்த மும்பை மாநகர காவல்துறையினர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.